யாழ், பொது நூலக எரிப்பின் நினைவு நாள் இன்று; வாசிப்பை, கல்வியை, வரலாற்றை, பாரம்பரியத்தை நேசித்த இதயங்களை எரித்த நாள்!

யாழ், பொது நூலக எரிப்பின் நினைவு நாள் இன்று; வாசிப்பை, கல்வியை, வரலாற்றை, பாரம்பரியத்தை நேசித்த இதயங்களை எரித்த நாள்!

jaffna news

-அஜ்மல் மொஹிடீன்

கல்விச் சமூகத்தை அழிக்க நினைத்த கயவர்களால் கல்வியின் ஆலயமாக திகழ்ந்த தென்னாசியாவின் மிகப்பெரிய யாழ்,நூலகம் எரிக்கப்பட்ட நாள்! (1981.05.31)

1933ஆம் ஆண்டு சிவில் சமூகத்தின் அர்ப்பணிப்போடு உருவாக்கப்பட்ட யாழ், பொது நூலகம், 1959ஆம் ஆண்டு அன்றைய யாழ், மாநகர சபை மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களால் புதிய கட்டிட வடிவமைப்போடு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்திய கட்டிட கலைஞர் S. நரசிம்ஹன், இந்திய முன்னனி பிரதான நூலகர் S.R. ரெங்கநாதன் ஆகியோரது ஆலோசனையோடு அன்று நூலகம் வடிவமைக்கப்பட்டது.

1981,மே,31ஆம் திகதி இதே போன்ற ஒரு ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டனியிரால் நடத்தப்பட்ட மக்கள் பேரணி ஒன்றில் மூன்று பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து உருவாகிய கலவரத்தில் மே 31ம் ஜூன் 1ம் திகதிகளில் அன்றைய யாழ் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுடைய வீடும்,பல வர்த்தக நிறுவனங்களும் எரிக்கப்பட்டன.

இலங்கையிலேயே தினந்தோறும் வெளிவந்த " ஈழநாடு" நாளாந்த பத்திரிகை நிறுவனம் எரிக்கப்பட்டது.

அந்த தொடரில் யாழ்,பொது நூலகமும் எரியூட்டப்பட்டது,அன்றைய அமைச்சர்களான சிறில் மத்தியூ,காமினி திசாநாயக போன்ற அமைச்சர்கள் யாழில் பிரசன்னமாகியிருந்த அந்த இரு நாட்களில்வ்இத்தகைய அட்டூழியங்களும், தீவைப்புக்களும் நடந்தேறின. 97000க்கு மேற்பட்ட புத்தகங்கள்,உலகறிந்த தத்துவவியலாளர் ஆனந்தகுமாரசாமி, பேராசிரியர் கலாநிதி ஐசாக் தம்பையா போன்றோரது ஆய்வறிக்கைகள், கட்டுரைகள்,வரலாற்றுப் பாரம்பரியத்து க்கு சான்றுபகன்ற ஓலைச் சுவடிகள், கையேடுகள் போன்ற மீளப்பெற முடியாத அறிவுபொக்கிஷங்கள் ஒரே இரவில் எரிக்கப்பட்டன.

யாழ்,நூலகம் எரிந்து கொண்டிருந்த போதே அதனை கேள்விப்பட்ட மொழி ஒப்பியல் ஆய்வாளர் டேவிட் பாதர் அதிர்ச்சியில் மாரடைப்பில் காலமானார்.

எமக்கெல்லாம் அறிவுப்பசி போக்கிய,சிறு வயதிலேயே வாசிப்பு பழக்கத்தை ஆவலை தூண்டிய,உருவாக்கிய அறிவாலயம் கற்றகயவர்களால் திட்டமிடப் பட்டு,காடையர்களால் தீ மூட்டப்பட்டது.

கல்வித் தேடலுக்கும்,இளநிலை, முதுநிலை,கலாநிதி பட்ட ஆய்வுகளுக்கு மட்டுமல்ல பாடசாலை கல்வியை இடைநிலையில் கைவிட்டோருக்கும் கூட கல்வியை தொடரவும்,மேல்நிலை அடையவும் ஒரு படிப்பகமாக திகழ்ந்தது.

என் சிறு வயதிலே வாசிப்பு தேடலை,ஆவலை உருவாக்கிய அறிவாலயம் அது,சிறிது காலம் நான் யாழ்,மத்திய கல்லூரியில் கற்ற காலத்தில்  அன்றைய இருநேர பாடசாலை மதிய இடைவேளை கூட யாழ்,நூலகத்திலேயே சங்கமித்திருக்கிறது.

யாழ்,நூலகத்துக்கென்றே வருகின்ற பலரை என்நண்பர்களாக்கி இருக்கின்றது.
யாழில் நான் வாழ்கின்ற காலத்தில் எனக்கறிவு தெரிந்த காலம் முதல் நான் விடுதலை புலிகளால் சமூகமாய் வெளியேற்றப்படும் வரை எனது அதிகமான காலங்கள் யாழ்,பொது நூலகத்தோடேயே இணைந்திருக்கின்றது.

வடக்கில் அரசியலின் ஏகப் பிரதிநிதிகளாக இருந்த தமிழரசுக் கட்சியினரால்,(பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டனியினரால்,TULF) யாழ்ப்பாண நகரில்‌ அரசியல் செய்ய முடியாதிருந்தது,

யாழ்,நகரின் மக்களால் கவரப்பட்ட யாழ்,பொது நூலகம்,நவீன சந்தை கட்டிடம் போன்றவற்றை கட்டிய யாழ்,மாநகர சபை மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் ஆளுமையை,ஆதரவை கடந்து தமிழரசுக் கட்சியினரால் யாழ்,நகரில் அரசியல் செய்ய முடியாதிருந்தது,அன்றைய இளைஞர்களுக்கு அரசியல் உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டிய அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன் போன்றவர்களது அரசியல் உணர்ச்சித் தூண்டுதலால் உந்தப்பட்ட பிரபாகரானல் அல்பிரட் துரையப்பா பொன்னாலை கோயிலில் வழிபாட்டிலிருக்கும்‌ போது  சுடப்படுகின்றார்,பின்னாளில் பிரபாகரன் தலைமை தாங்கிய விடுதலை புலியின ரால்அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன் ஆகிய இருவரும் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு பேச்சுவார்த்தைக்கு வந்த விடுதலை புலி பிரதிநிதிகளை அந்த வீட்டின் பாதுகாப்பதிகாரிகள் தடுத்து சோதனையிட முயற்சித்த போது வீட்டிற்குள்ளிருந்த யோகேஸ்வரன் அவர்களை உள்ளே அனுமதிக்குமாறு பாதுகாப்பதிகாரிகளுக்கு  உத்தரவு கொடுத்தார். உள்ளே வந்த விடுதலை புலியினர் அனைத்து நம்பிக்கைகளையும் தகர்த்து அமிதலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் சுட்டுக் கொள்கின்றனர்.

பின்னாட்களில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டுயிட்ட அன்றைய அமைச்சர் காமினிதிசாநாயக்க,அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா போன்றோர் குண்டு வெடிப்பொன்றில் கொல்லப்படுகின்றனர்.

பின்னர் 2009ல் முள்ளிவாய்க்காள் இறுதி யுத்தத்தில் நந்திக்கடலில் பிரபாகரனது சடலம் கண்டெடுக்கப்படுகின்றது.

1970,71களில் ஆரம்பித்து  2009வரை எத்தனை உயிர்கள்,உடைமைகள், கோயில்கள்,தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள்,நேர்மையான,நேர்மையற்ற அரசியல் வாதிகள் மதகுருக்கள்,கல்விமான்கள்,அதிபர்கள்,அரச உத்தியோகத்தர்கள்,கலைஞர்கள், அமைச்சர்கள்,மாணவர்கள்,இனவிடுதலைக்காக என்ற தூய்மையான எண்ணத்தோடு ஆயுதம் ஏந்திய இளைஞர்கள்,தேசத்தின் இறைமையை பாதுகாக்க போரிட்ட படை வீரர்கள், பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இன வெளியேற்றம்,தெற்காசியாவின் பெருமைபெற்ற அறிவாலயமான யாழ்,பொது நூலக எரிப்பு என எத்தனை அழிவுகள்,இழப்புக்கள்,துயர்கள் என்று முடித்து வைக்கப்பட்டன.என்ன முடிவைக் கண்டோம்,என்ன பயனை அனுபவித்தோம்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post