"வர்த்தமானியை மீளப்பெற ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை; வேட்பு மனுக்களை மீள ஏற்க முடியாது!" தேர்தல் தொடர்பான ஜனாதிபதிக்கு எதிரான மனு விசாரணையின் இன்றைய உயர் நீதிமன்ற வாதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

"வர்த்தமானியை மீளப்பெற ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை; வேட்பு மனுக்களை மீள ஏற்க முடியாது!" தேர்தல் தொடர்பான ஜனாதிபதிக்கு எதிரான மனு விசாரணையின் இன்றைய உயர் நீதிமன்ற வாதம்!

இன்று (26) ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானியை மீளப் பெற்றுக்கொள்ள அவருக்கு அரசியல் அமைப்பின் ஊடாக எவ்வித சட்ட அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திக தேமுனி டி சில்வா வாதிட்டார்.

ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாகவும், அவ்வாறன பின்னணியில் எவ்வாறு அடிப்படை உரிமை மீறப்பட முடியும் எனவும் கேள்வி எழுப்பிய அவர், 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும், விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் என  உயர் நீதிமன்றை கோரினார்.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ஆகியோர் சார்பில் மன்றில் ஆஜராகி அடிப்படை ஆட்சேபங்களை முன்வைத்து வாதிடும் போதே அவர் மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.

ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும்  வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று 06ஆவது நாளாகவும் மன்றில் பரிசீலிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான  விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்   கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றின் 501 ஆம் இலக்க அறையான உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு நிகழ்வுகள் மண்டப அறையில் இவை பரிசீலனைக்கு வந்தன.

இந்நிலையில் கடந்த  வெள்ளியன்று மேலதிக சொலிசீட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திக தேமுனி டி சில்வா வாதங்களை ஆரம்பித்திருந்த நிலையில், அவர் இனடறு முழுதும் அவரது தரப்பு வாதங்களை தொடர்ந்தார். குறிப்பாக ஜனாதிபதியின்  பாராளுமன்றத்தை கலைத்த மார்ச் 2 ஆம் திகதி வர்த்தமானியை மையப்படுத்தி அவரது வாதங்கள் அமைந்தன.

"ஜனாதிபதி கடந்த மார்ச் மாதம் 02ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானியானது அரசியலமைப்பின் 33 (2) , பிரகாரம் அந்த உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படவேண்டிய அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரை பிரகாரமே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. எனவே நாட்டில் எந்த ஒரு குடிமகனினதும் அல்லது மனுதாரரினதும் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை. ஜனாதிபதிக்கு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்ட அல்லது அது குறித்த வர்த்தமானியை மீளப் பெற எந்த அரசியலமைப்பு அல்லது சட்ட ரீதியிலான அதிகாரமும் இல்லை. ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் கலைக்கப்பட்ட மாகாண சபை ஒன்றினை மீள கூட்டவே அதிகாரம் உள்ளது.  எனவே மனுதாரர்கள் கோருகின்ற  நிவாரணத்தை வழங்க்க ஜனாதிபதியால் முடியாது. எனவே இந்த மனுக்களை  உடனடியாக  நிராகரித்து உத்தரவிட வேண்டும்.

அத்துடன் மனுதாரர்கள் கூறுவதைப் போன்று விடுமுறை தினங்களில் வேட்பு மனுக்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் தேர்தல் நடாத்த எந்த வகையிலும் தடையாக அல்லது சட்ட மீறலாக அமையப் போவதில்லை.

ஏனெனில் விடுமுறை திங்களில் வேட்பு மனுக்களை ஏற்க எந்த தடையும் இல்லை. ஒரு வேளை விடுமுறை தினத்தில் வேட்பு மனுக்களை ஏற்றது தவறானது என  சில கணங்களுக்கு  நினைத்துக் கொள்வோம். அப்படியாயினும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை  நிராகரித்து மீள வேட்புமனுக்களை கோர பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தில் எந்த வகையிலும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவில்லை." என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திக தேமுனி டி சில்வா வாதிட்டார்.

அத்துடன், இரகசிய ஆவணம் ஒன்றினை நீதிபதிகளுக்கு கையளித்த அவர் தொடர்ந்து பின்வருமாறு நீதிமன்றில் அது சார்ந்து விடயங்களை விளக்கினார்.

"இந்த அறிக்கை தேசிய உளவுத் துறை ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அறிக்கை. அந்த அறிக்கை பிரகாரம் மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் இருந்து எந்த கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அப்படியானால் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு உடனடி தேர்தல் ஒன்றினை நடாத்த முடியும். அப்படியான சூழலில் அவர்கள்  தேர்தலை நடாத்தாமல் காலம் தாழ்த்துவது மக்களின் உரிமைகளை பாதித்துள்ளது.

எனவே உடனடியாக தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக் குழு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடாத்தாப்படும் தேர்தல் ஒரே நாளிலோ அல்லது வேறு வேறு நாட்களில் பகுதி பகுதியாகவோ நடாத்தப்பட முடியும்.

உளவுத் துறை அறிக்கை பிரகாரம் மிக வெற்றிகரமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. எனவே பாராளுமன்றத்தை கூட்டி கொரோனா தடுப்புக்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.' என பிரஸ்தாபித்தார்.

இந்நிலையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேமுனி டி சில்வாவின் வாதம்  நாளைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. நாளைய தினம் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வாவின் வாதத்தின் ஒரு பகுதி தொடர்வுள்ள நிலையில், அதன் பின்னர் அவரது வாதத்துக்கு மனுதாரர் தரப்பில் பதில் வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நாளை 27ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீள மனுக்கள் மீதான பரிசீலனைகள் 07 ஆவது நாளாக தொடரவுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.