தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை; அவர்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவேன் - கோட்டாபய ராஜபக்ச!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை; அவர்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவேன் - கோட்டாபய ராஜபக்ச!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் கோட்டாபய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தனை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து 40 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்றது. கோட்டாபய மற்றும் சித்தார்த்தனைத் தவிர வேறு எவரும் இதில் பங்கேற்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கும் என்றும், மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் வாக்குகளை அண்மித்தே உங்களுக்கும் (கோட்டாபய) வாக்குகள் கிடைக்கும் என்று சித்தார்த்தன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பில் கோட்டாபய இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார். கட்சி தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்துடனேயே கதைக்கவேண்டும் என்று சித்தார்த்தன் பதிலளித்துள்ளார். அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கோட்டாபய குறிப்பிட்டதுடன், அவர் சந்திப்பாரா? என்று கேள்வி எழுப்பியதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார் என்பதைச் சுட்டிக்காட்டும் கோட்டாபய, அந்த வாக்குகளை சிங்களப் பகுதியிலேயே பெற்று விடுவேன் என்று தெரிவித்தாகவும், தமிழ் மக்களின் வாக்குகள் தனது வெற்றிக்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டதாகவும் சித்தார்த்தன் தெரிவித்தார். ஆனாலும், இலங்கை முழுவதிலிருந்தும் தனக்கு வாக்குகள் கிடைக்கப் பெற்றால்தான் சர்வதேச சமூகம் இலங்கையின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளும் என்றும் கோட்டாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீதமான மக்கள் வாக்களித்திருந்தாலும் இப்போது அதே எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பது சந்தேகம் என்றும், மக்கள் எல்லோரிலும் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றும் கோட்டாபயவுக்கு எடுத்துரைத்தாக சித்தார்த்தன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படாது என்று கோட்டாபய தெரிவித்தார். புதிய அரசமைப்பை யாரும் நிறைவேற்றுவார்கள் என்று நம்பவில்லை என கோட்டாபயவுக்குச் சுட்டிக்காட்டினேன் என்று கூறினார் சித்தார்த்தன்.

13ஆவது திருத்தத்தில் பல விடயங்கள் இருக்கின்றன எனவும், பொலிஸ் அதிகாரம் வழங்கினாலும் முழுமையான பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது எனவும் கோட்டாபய கூறியதாக சித்தார்த்தன் தெரிவித்தார்.

காணி அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்பதில் கோட்டாபய உறுதியாக இருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. அதற்கு அவர் கடந்த காலத்தில் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் பெரிய முதலீடு ஒன்றைத் தடுத்ததை உதாரணமாகச் சுட்டிக்காட்டியதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

மேலும், அரசியல் விடயங்களை எம்.ஆர். (மஹிந்த ராஜபக்ச) பார்த்துக் கொள்ளுவார் என்று கோட்டாபய தனது சந்திப்பில் கூறியதாக சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் அமைச்சர்களும் வரவேண்டும், முஸ்லிம்கள் அமைச்சுப் பதவிகளை எடுத்து எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றார்கள். அதனைப்போன்று தமிழ் மக்களும் முன்னேற வேண்டும் என்று கோட்டாபய கூறியதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.