
கடந்த ஞாயிற்றுக்கிழமை மஹியங்கனை மெத்தடிஸ்தத் திருச்சபை மீது பிக்குகள் மூன்றுபேர் சென்று தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 04 நாட்களாகின்ற போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இருந்த போதிலும் தாக்குதல் நடத்தப்பட்டபோது சபைக்கு வெளியே அப்பிரதேசத்திலுள்ள மொறயாய ஸ்ரீ நாகவனாராமய விகாரையின் தலைமைப்பிக்கு கலவல சுஜாத்த தேரர் நின்றுகொண்டிருந்த போதிலும் தாக்குதலைத்தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் தெஹிகொல்ல ரத்தன தேரர் தலைமையிலான ஹந்தவெல விகாரைப் பிக்கு, மினித்தே விகாரைப் பிக்கு உள்ளிட்ட மூன்று பிக்குகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான ஜேசுதாஸ் என்கிற ஊழியம் செய்யும் மெத்தோடிஸ்த சபை ஊழியர் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று நேற்று புதன்கிழமை மாலை வீடு திரும்பியிருப்பதாக அருட்தந்தை ரமேஷ் பெர்ணான்டோ எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஹசலக்க – நன்னப்புராவ மெத்தோடிஸ்தத் திருச்சபை அருட்தந்தை லூக் எதிரிசிங்க ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் சம்பவம் குறித்து முறைப்பாட்டை செய்திருக்கின்றார்.