
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டதுடன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இராணுவத் தளபதி போன்றோர் நேரில் தமது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரிவுக்குழு அழைப்பு விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதுடன், தான் தெரிவுக்குழுவில் ஆஜராவதற்கு தயாராகவே இருப்பதாக பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சி வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையும் அழைக்கப்படவுள்ளதாக அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியையும், கர்தினாலையும் தெரிவுக்குழுவுக்கு அழைப்பது பொருத்தமற்றது என்பதனால், அவர்கள் இருக்கும் இடத்துக்கு தெரிவுக் குழு சென்று விசாரணைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேட தெரிவுக் குழு முன்னெடுத்துவரும் விசாரணைகளின் போது ஜனாதிபதி மற்றும் கர்தினால் ஆகியோர் குறித்து பலராலும் வெவ்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனால், இந்த இருவரிடமும் கருத்துக்களைக் கேட்டறிவது முக்கியமானது எனவும் தெரிவுக் குழு கருதுவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னதாக இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி, தெரிவுக் குழுவில் ஒருபோதும் ஆஜராகப் போவதில்லையெனபல தடவைகள் பகிரங்கமாகவே பேசியிருந்ததுடன், தன்னை சிக்க வைக்கவே இத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.