ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 07ஆம் திகதிக்குள் நிச்சயம் நடைபெறும்! -தேர்தல் ஆணையாளர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 07ஆம் திகதிக்குள் நிச்சயம் நடைபெறும்! -தேர்தல் ஆணையாளர்

Election Commissioner
ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 07ஆம் திகதிக்குள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த திகதிகளில் உறுதியாக தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், தேர்தலை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உச்சநீதிமன்றத்தை நாடமாட்டார் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகித ஸ்ரீலங்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலமானது வருகின்ற ஜனவரி மாதம் நிறைவுக்கு வருகின்றது.

இதற்கிடையில் டிசம்பர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என்று பல்வேறு தரப்பினரும் அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதேவேளை ஜனாதிபதி தேர்தலை இந்த வருடம் நடத்தாமல் பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளும் இடம்பெற்று வருவதாக ஜே.வி.பி, மஹிந்தவாதி உறுப்பினர்கள் எனப் பலரும் ஆருடம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, ஜனாதிபதித் தேர்தல் ஒருபோதும் டிசம்பர் 07ஆம் திகதிக்குப் பின்னராக பிற்போடப்பட மாட்டாது என்று உறுதியளித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தின் நவம்பர் 09ஆம் திகதிக்குப் பின்னரும் டிசம்பர் 08,09ஆம் திகதிகளுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். நவம்பர் 10ஆம் திகதி மற்றும் டிசம்பர் 10ஆம் திகதிகள் ஞாயிறு என்பதால் தேர்தலை நடத்தமுடியாது. நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதிவரை தேர்தலை நடத்தமுடியாது. 14ஆம் திகதி போயா தினம் காணப்படுகிறது.

எமது நாட்டு வாக்குச்சாவடிகளில் 30 வீதமானவை விகாரைகளாகும். ஆகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தக்கூடிய மிகவும் அருகிலான திகதியாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 07 வரையாக காலகட்டத்தைக் குறிப்பிட முடியும். இந்த இரண்டு திகதிகளில் ஏதாவது ஒரு திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என்பதை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

ஜனாதிபதி இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 07ஆம் திகதி நடைபெறும் என்பதை கூறியிருந்தார். அந்த திகதிதான் தேர்தலை நடத்தக்கூடிய இறுதித் திகதியாகும். அதனால் சிலருடைய கருத்துக்களாக தேர்தல் பிற்போடப்படலாம் என்று நிலவுகிறது. இருப்பினும் நியமித்த திகதிகளை விடுத்து தேர்தலை நடத்தமுடியாமல் தடுப்பதற்கு யாரால் முடியும்? அதனை ஜனாதிபதியினால் மட்டுமே அதனை செய்ய முடியும்.

அது எவ்வாறு என்றால் குறித்த திகதிகளுக்கு முன்னரே தேர்தலை நடத்தலாம். ஆனால் அந்தத் திகதிகளைக் கடந்து தேர்தலை நடத்தமுடியாது. அதேவேளை உச்சநீதிமன்றத்தை நாடி நிலைமையை மாற்றியமைக்க முடியுமென சிலர் கூறலாம். ஆனால் ஜனாதிபதியே டிசம்பர் 07ஆம் திகதி என்பதை அறிவித்திருப்பதால் உச்சநீதிமன்றம் சென்று திகதியை மாற்றியமைக்க மாட்டார் என்பது எம்முடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இருந்து ஊர்ஜிதப்படுத்த முடிகிறது.

ஆகவே உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி பெறமாட்டார். உலக அழிவு அல்லது மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் இருந்தால் நியமித்த திகதியில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடைபெறும்”

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.