
ஜப்பானிய அரசாங்கம், 1,800 மில்லியன் அமேரிக்க டொலரினை இலங்கைக்கு கடனாக வழங்க தீர்மானித்துள்ளது. “லைட் ரெயில் டிரான்ஸிட் சிஸ்டம் (எல்.ஆர்.டி)” எனும் திட்டம், கொழும்பு நகர மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீர்வாக இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) அதன் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இந்த திட்டத்திற்காக வழங்கவுள்ளது.
முதற்கட்டமாக ஜப்பானிய யென் 30,040 மில்லியன் கடன் பெறும் நோக்கத்திற்காக இந்த உடன்படிக்கை தொடர்பான கடன் ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் டாக்டர் ஆர்.ஹெச்.எஸ். சமரதுங்க, இலங்கையின் ஜப்பானிய தூதர் அகிரா சுகியாமா மற்றும் ஜே.சி.ஏ.ஏ யின் பிரதான பிரதிநிதி புசாட்டொ தனகா ஆகியோர் இன்று (11) கையொப்பமிட்டனர்.
"Vision 2025: An Enhanced Country" திட்டத்தினூடக “லைட் ரெயில் டிரான்ஸிட் சிஸ்டம் (எல்.ஆர்.டி)” மேற்கொள்ளப்பட உள்ளது.
"2030 மேற்கு பிராந்திய மெகாபோலிஸ் மாஸ்டர் பிளான்" மூலம் 17 கி.மீ நீளம் கொண்ட மாலபே முதல் கொழும்பு கோட்டை வரையிலான ரயில் பாதையை 16 பிரதான தரிப்பிடங்களாக நிர்மாணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டு, பல நிர்வாக வளாகங்கள், வணிக மையங்கள் மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை உள்ள நகரங்களுக்கிடையிலான இணைப்பினை மேற்கொள்ளவுள்ளது.
முன்மொழியப்பட்ட லைட் ரெயில் அமைப்பின் கீழ் சேவைக்காக 25 புகையிரதங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொன்றும் 800 பயணிகள் வரை செல்லகூடியதாகவும், நான்கு குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளை கொண்டதாகவும் இருக்கும். உச்ச நேரங்களில் 3 நிமிட இடைவேளைகளில் புகையிரத சேவைகளை வழங்கவும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் மெகாபோலிஸ் மற்றும் மேற்கத்திய பிராந்திய அபிவிருத்தி, மெகாபொலிஸ் அமைச்சின் மதிப்பீட்டின்படி இத்திட்டத்திற்காக ஜப்பானிய யென் 246, 641 மில்லியன் செலவாகும்.
இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக மிக அதிகமான வெளிநாட்டுக் கடனினை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் ஜப்பானிய யென் 200,415 மில்லியன் (சுமார் 1,800 மில்லியன் அமெரிக்க டொலர்) இனை சலுகை கடனாக ஜப்பான் வழங்கவுள்ளது.
