இந்த நாட்டில் இனியும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம மந்திரியாக வர முடியாது என்ற கருத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, அதையும் நாங்கள் இறைவன் உதவியால் எங்கள் அரசியல் சரித்திரத்தில் சாதித்துக் காட்டுவோம். ஆட்சியையும் அந்தஸ்தையும் அடைந்து கொள்வதில் எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை என வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவை ஆதரித்து ஏறாவூரில் சனிக்கிழமை (14) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் நஸீர் அஹமட், இந்த நாட்டில் புரையோடிப் போய் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்த நாட்டுக்கு சிறுபான்மைச் சமூகத்திலிருந்து பிரதமர் ஒருவர் கட்டயாம் தேவை. அரசியல் அந்தஸ்தை அடைந்து கொள்வதற்கும் ஆட்சியதிகாரங்களில் அமர்ந்து கொள்வதற்கும் சிறுபான்மைச் சமூகங்களாகிய நாங்கள் பயப்பட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இந்த விடயங்களை வெளியில் சொல்வதற்கும் அஞ்சத் தேவையில்i. ஏனென்றால் இந்த நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே குடியியல் அந்தஸ்துதான் உள்ளது. மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கொல்லப்பட முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி விட்டுத்தான் மறைந்தார்கள். கடைசியாக அந்தக் கட்சி சார்பாகத்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்தாரே தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அல்ல. அவர் தேசிய ஐக்கியத்தை உணர்ந்தவராக எதிர்வு கூறலுடன் இதனைச் செய்தார்.
இந்த யதார்த்தத்தை சகவாழ்வை விரும்பும் இந்த நாட்டு மக்கள் கட்hடயம் புரிந்து கொண்டாக வேண்டும்
அப்படிப்பட்ட ஒரு தூரநோக்கு சிந்தனையாளரை வைத்து வியாபாரம் செய்வதைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் செய்து கொண்டிருக்கின்றார். நாங்கள் சமூகத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
இந்த நாட்டில் முஸ்லிம் என்ற அடையாளத்தோடு நடமாட முடியாத அச்சம் பீதி நிறைந்திருந்த காலத்தில் மத்ரசாக்கள் மூடப்பட்ட காலத்தில் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாத காலகட்டத்தில், புனித அல்குர் ஆன் பிரதிகளை வீட்டில் வைத்திருக்க முடியாது ஆற்றிலோ குளத்திலோ குப்பைத் தொட்டியிலோ கிணற்றிலோ போடப்பட்ட அச்சமும் பீதியும் அராஜகமும் தலைவிரித்தாடிய காலகட்டத்தில்தான் ரணில் விக்கிரமசிங்ஹ இந்த சாட்டைப் பொறுப்பெடுத்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த நாட்டில் மேற்சொன்ன நிலைமைகள் எதுவும் இல்லை. சிறுபான்மை பெரும்பான்மை எனும் அச்சம் இல்லை. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு மக்கள் மூவேளையும் உணவு உண்ண முடிகிறது. மாணவர்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். இந்த நிலை இனியும் தொடர வேண்டும். நாடு இனவாதம், மதவாதம் இன்றி கண்குளிர்ச்சி காணும் வகையில் அபிவிருத்தி அடைய வேண்டும் அதற்கு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்ஹவின் ஆட்சி நீடிக்க மக்களாணை வேண்டும்.” என்றார்.