புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கரையொதுங்கிய பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் கடற்கரையோரத்தில் இவ்வாறு சடலமொன்று கிடப்பதை நேற்று அவதானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் உடனடியாக பிரதேச மக்களுடன் இணைந்து அந்த பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த உடப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சடலமாக கரையொதுங்கிய பெண், 40 வயது முதல் 50 வயதுக்கும் இடைப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் சடலம் உருக்குலையாத நிலையில் ஆடை எதுவுமின்றி காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.
அந்த பெண் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவராக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.வசீம் ராஜா, சடலத்தை பார்வையிட்டு நீதிவான் விசாரணையை அடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கரையொதுங்கிய குறித்த பெண்ணின் சடலம் யாருடையது என்பது தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.