தொடரும் ஹஜ் மோசடிகள்; ஹஜ் குழு தலைவருக்கு பேருவளை ஹில்மி இடமிருந்து ஒர் திறந்த மடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொடரும் ஹஜ் மோசடிகள்; ஹஜ் குழு தலைவருக்கு பேருவளை ஹில்மி இடமிருந்து ஒர் திறந்த மடல்!


கொளரவ தலைவர் அவர்களுக்கு!

கடந்த சில காலங்கள் முதல் ஹஜ் விவகாரத்தில் நடை பெறும் உழல்கள் சம்பந்தமான செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பல்லின மக்களுடன் நாம் வாழும் இந்த நாட்டில், தூய்மையான இந்த வணக்கத்தின் பெயர் பாசுபடுவது வெற்கமும் மனவேதனையுமாகவே உள்ளது.

நான் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஒரு அங்கத்தவனாக பிறந்தேன் என்ற வகையில், இப்புனித வணக்கத்தின் புனிதத்துவத்தை பாதுகாப்பது என்மீதும் ஒரு கடமை என்ற கடமை உணர்வோடும் கவலையோடும் இம்மடலை வரைகிறேன். 

மேலும் இப்புனித வணக்கத்தின் தூய்மையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் ஒரு பாரிய பொறுப்பை அலாலாஹ் உங்கள் மீது ஒப்படைத்துள்ளான்.

இதற்காக அல்லாஹ் விடத்தில் தாங்கள் ஒரு பொறுப்புதாரி. மறுமையில் இதற்காக பதில் கூறவேண்டும் எனற கடமையை உணர்வையும் தாங்க உணர்ந்திருப்பீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையும் என்னுள் உண்டு.

ஹஜ் கடமை என்பது இஸ்லாத்தின் கடைசியான கடமையாகும். இது வசதி உள்ளவர்கள் மீது மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளதுஎன்பதும் தாங்கள் அறிந்த விடயமே. 

அத்தோடு இந்த ஹஜ் எவ்வாறு செய்யப்பட வேண்டும். இதற்காக பயன்படுத்தப்படும் பணம் எந்தளவு சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதும் இஸ்லாம் தெள்ளத் தெளிவாக கூறுகின்றது.

ஹஜ் செய்ய வசதி இல்லை என்பதற்காக லஞ்சம் வாங்கியோ, குறிப்பிட்ட சில முகவர்களுக்கு கோட்டாக்களை அதிகமாக வழங்கியோ கடமைகளை துஷ்பிரயோகம் செய்தோ, அரசியல் வாதிகளுக்கு வால் பிடித்தோ, அரசியல் மேடைகளில் கிராத் ஓதியோ, அரசியல் வாதிகளுக்கு சார்பாக மீடியாக்களில் செய்திகளை எழுதுவதின் மூலமோ, அல்லது கண்டியில், அல்லது வேறு எங்காவது இருக்கும் ஒரு அரசியல் வாதியின் காலில் விழுந்து, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு சரிபார்சு செய்வதன் மூலம் இலவச விஸாவைப் பெற்று ஹஜ் செய்யவேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு கிடையது. அல்லாஹ் அப்படிச் சொல்லவில்லை.

இவ்வாறு ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்களுக்கு உலகின் ஹாஜி ப்பட்டத்தை தவிர எந்தவித பயனுமில்லை. தனக்கு உரிமை இல்லாத வாய்பை தாகாத முறையில் பெற்றுக் கொண்டதற்காக அல்லாஹ்வின் அதிருப்தியைத்தவிர, திருப்தியை அடைந்து கொள்ளவே முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையாகும்.

தூய்மையான வணக்கத்தை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

மேற்கூறியவாறு ஹஜ் செய்வதை விட ஹஜ் செய்ய வசதி இல்லாமல் கவலையோடு மரணிக்கும் ஒருவருக்கு, ஆயிரம் ஹஜ் செய்த நன்மைகளை எழுதிவிட அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். 

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
(கவலை , கஷ்டம் , துக்கம் , வேதனை , சோதனை) அனைத்திலும் அல்லாஹ் போதுமானவன்.

எமது நாட்டின் ஹஜ் விவகாரத்தில் கடந்த சில காலங்களாக மேற் கூறியது போல் ஹஜ் மோசடிகள் தொடர்வதை அவதானிக்க முடிகின்றது. இதற்கான முதல் காரணமாக அரசியல் தலையீடுகள் பின்னணியில் இருப்பதே காரணமாகின்றது என்ன அறிகிறேன்.

இதன் அடிப்படையில் இம்முறையும் ஹஜ் விஸாவில் மோசடிகள் நடந்துள்ளதை பல ஹஜ் முகவர்கள் மூலமாகவும், இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாகவும்,
மற்றும் social media க்கள் வெளிவரும் குரல் பதிவுகள், மற்றும் கானெளிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

எமது இலங்கை முஸ்லிம் மக்களின் சனத்தொகை அடிப்படை யாகக் கொண்டு 3000 முதல் 4500 வரையிலான கோட்டக்களை சவ்தி அரேபியா ஹஜ் பிரிவு வழங்கி வருகின்றது.
இம்முறை 3500 விஸாக்கள் கிடைக்கப்பெற்றன என அறிகின்றேன். 

இம்முறை கிடைக்கப்பெற்ற 3500 வீஸாக்களுக்கு மேல்லதிகமாக 500 விஸாக்களை ஹஜ் கமிட்டி சவ்தி அரேபியா விடம் கேட்டிருந்ததாகவும், அதற்காக பொறுப்பாளர்களிடமிருந்து ஒரு வேண்டுதல் கடிதத்தை எடுத்து வரும்படி இலங்கையில் உள்ள சவ்தி அரபியா தூதுவரகம் வேண்டுகோள் விடுத்ததாகவும், இதை தாங்கள் பொறுப்பில் உள்ள ஹஜ்கமிட்டி தட்டிக்கழித்ததாகவும், ஹஜ் விவகாரம் தொடர்பாக ஈடுபடும் சிலர் தெரிவித்தனர்.

மேலும் அவ்வாறு வழங்கியிருந்தால், இறுதிக்கட்டத்தில் குறைந்த விலையில் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள, சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைத்துக் கொண்டிருக்கும் பல வறிய மக்களுக்கு ஹஜ் செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்பது அநேகமான மக்களின் கருத்தாகும்.

மேலும் இது தொடர்பாக சமூகத்தில் அளவலாவியபோது "இவ்வாறு செய்திருந்தால் நானும் போயிருப்பேன்" என சிறுத்தொகை பணத்தை சேர்த்து வைத்திருக்கும் சிலரின் மனக் குமுறலையையும் அவதானிக்க முடிந்தது.

இது விடயத்தில் ஹஜ் கமிட்டி சில ஹஜ் மாபியாக்களின் ஏகபோகத்தை பாதுகாக்க உதவியதாக சமூகத்தில் சில செய்திகள் அடிபடுகின்றன. சமூகம் சார்பாக இது விடயத்தில் விளக்கத்தை அளிப்பது தங்களின் கடமையாகும் என நினைத்து நான் ஒரு சமூக உறுப்பினர் என்ற வகையில் இதற்கான விளக்கத்தை சமூகம் சார்பாக தாங்களிடம் தாழ்மையாக வினவுகின்றேன். 

சவ்தி ஹஜ் பிரிவினால் வழங்கப்படும் இந்த ஹஜ் கோட்டா இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 93 ஹஜ் முகவர்களிடையே அவர்களின் அனுபவம் காலம் மற்றும் பலம் திறமை, கடந்தகால வரலாறுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

கடந்த வருடம் இதில் ஏற்பட்ட குளறுபடிகளில் , ஒரு முகவரின் கோட்டவை குறைத்து இன்னெரு முகவருக்கு வழங்கியமையினால் தமக்கு ஏற்பட்ட அநீதிக்காக நீதிமன்றம் சென்றதாக அவர்கள் தரப்பில் கூறப்பட , இல்லை இல்லை அவர்கள் கொண்டு சென்ற ஹாஜிகளை சரியாக வழிநடாத்தவில்லை என்று ஹஜ் கமிட்டியால் கூறப்பட, இல்லை இல்லை, உயர் நீதி மன்ற வழிகாட்டலின் படி எங்களுக்குறிய கோட்டாவை நாங்கள் கேட்டதினால் நாங்கள் இடைநிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்டோம் என அவர்கள் கூற, இந்த விவகாரத்தில் ஹஜ் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் தாங்களின் உத்தரவை மீரி செயல்பட்டதினால் இந்நிலை ஏற்பட்டது என குழு உறுப்பினர்களை தாங்கள் சாட, இறுதியில் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

இறுதியில் இம்முறை இலங்கை மக்கள் ஹஜ் செல்லும் வாய்ப்பு இறுதி ஒரு நாளில் தப்பியது. யார் யார் செய்த பிரார்த்தனையோ...யாரின் பிரார்த்தனை அலாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டதோ... அல்ஹம்துலில்லாஹ்.

வழக்கு தொடர்ந்தாலும் இம்முறை மக்களுக்கு ஹஜ் செய்ய வாய்ப்பு கிடைத்தது பெரிய விடயம். இல்லாவிடில் இனவாதிகள் சந்தர்பம் பார்த்து நிற்கும் நம் நாட்டில், இதுவே ஒரு பெரிய சீரழிவாக மாறி இருக்கும். 

இத்தனைக்குமான முக்கிய காரணம், கிடைக்கும் கோட்டவை பகிர்ந்தளிக்க உயர் நீதிமன்றத்தினால் அங்கரிக்கப்பட்ட ஒழுங்கான சட்ட வரைபின் அடைப்படையை பின்பற்றாததே என பல குற்றச் சாட்டுக்களும் சமூகத்தில் உள்ளன.

நீதிமன்ற விவகார‌ம் என்பதனால் இதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நீதி மன்றம் இதற்கான நீதியை வழங்கட்டும்.

எனவே ஹஜ் கோட்டா பங்கீட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தினால் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட பொறிமுறைப்படி வழங்கப்பட வேண்டும். இது இறுக்கமான பின்பற்றப்பட வேண்டும் என்பதையும், இது சம்பந்தமாக தாங்கள் உட்பட முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பணிவோடு எனது ஒரு ஆலோசனையாக தாங்கள் முன் முன்வைக்கிறேன்.

ஒரு நாட்டின் பொறுப்பான ஹஜ் குழு என்ற வகையில், ஹாஜிகளின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு சில இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

அவ்வாறின்றி நிலமை இவ்வாறு தொடருமாக இருந்தால், அவ்வப்போது பதவிக்கு வரும் உறுப்பினர்கள், தலைவர்கள், அதிக கோட்டாவை ஹஜ்முகவர்களுக்கு வழங்குவதற்கு லஞ்சம் பெறுதல் , மற்றும் வரப்பிரதசாதங்களை பெறுவதற்கு வோறு வழிகளை கை கொள்ளுதல், ஒவ்வொரு முறையும் பதவிக்கு வருபவர்கள் தங்களுக்கு சாதகமான ஒரு பங்கீட்டு முறையை அறிகமுகப்படுத்திக் கொள்ளுதல், ஹஜ் முகவர்கள் அதிகமான கோட்டாக்களை பெற்றுக் கொள்வதற்கு ஹஜ் கமிட்டி உறுப்பினர்களின்
தயவை நாடுதல், ஹஜ்கமிட்டி உறுப்பினர்கள் தாங்கள் பதவிகளை ஒரு வரப்பிரசாதமாக பயன்படுத்துதல் போன்ற சீர்கேடுகள் தொடரும் என்பதையும் பணிவுடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
 
மேலும் ஹாஜிகளை ஏற்றிச் செல்லும் ஒரு பஸ் வண்டிக்கு 40 பேருக்கு ஒருவர் பொறுப்பு தாரி என்ற அடிப்படையில், சவ்தி ஹஜ் பிரிவு பேஸா வீசாவை வழங்குவது வழக்கம்.

பேஸா விஸாவை பொறுத்தவரை ஏனைய விஸாக்களை விட வித்தியாசமானதும் முதன் நிலை விஸாவாகவும், சுமார் 5 லற்சம் முதல் 6 லற்சம் வரையிலான லாபமும் இதில் காணப்படுகிறது என அறிகின்றேன். (பேஸதுல் ஹஜ்) என அழைக்கப்படும் இந்த வீஸாவில் ஹஜ் முகவர், வழிகாட்டி, பொறுப்பாளர் மட்டுமே செல்ல முடியும் என்பது சவுதி அரேபியா அரசாங்கத்தின் கடும் நிபந்தனையாகும். 

அனைவரினதும் பாஸ்போட் ஜித்தா விமான நிலையத்தில் சவ்தி அதிகாரிகளினால்
அவர்களது பொறுப்பில் எடுக்கப்பட்டு, நாடு திரும்பும் போதே மீண்டும் வழங்கப்படுகின்றது. ஹஜ் முகவர்களுக்கான பேஸா விஸாவில் செல்லும் முகவர்களின் கடவுச்சீட்டு மட்டுமே வெளித் தேவைகளுக்காக செல்வதற்கு அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இம்முறை ஊழல் காரணமாக பேஸா வீசாக்களை அரசியல்வாதிகள் பகிர்ந்து கொண்டதால் சாதாரண வீஸாலில் ஹஜ் சென்றுள்ள முகவர்களுக்கு ஹாஜிகளின் தேவைக்காக வெளியில் செல்ல முடியாத கடும் சிக்கலான நிலை அங்கு தொடர்வதாக சில ஹஜ் பயணிகள் தெரிவித்தனர். இதன் உண்மையான நிலைப்பாட்டை விளக்க வேண்டி நிற்கின்றேன்.

இந்த விஸாவில் சாதரண ஹஜ் பயணிகளோ மந்திரிமார்களோ, அரசியல் வாதிகளோ, அரசியல் வாதிகளின் கும்பங்களோ, அவர்களின் மனைவிமார்களோ அவர்களின் எடுபிடிகளோ செல்ல முடியாது. இதிலும் இவ்வாறு திருட்டுத்தனமாக செல்பவர்களின் ஹஜ் அல்லாஹுஅஃலம், அவன் அறிந்தவன்.

இந்த அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 150 பேஸா விஸாக்களை இலங்கைக்கு சவ்தி ஹஜ் பிரிவு வழங்கி வந்தது.

கடந்த காலங்களில் பேஸா விஸாவை அரசியல் வாதிகள், அவர்களின் குடும்பங்கள் பயண்படுத்தியது, சம்பந்தமான விடயங்களை தாங்கள் ஒரு சமூக வலைதள நேர்காணலில் ஏற்றுக் கொண்டதும் என் நினைவில் உள்ளது. இந்த விவகாரம் சவ்தி அதிகாரிகளுக்கு
கையும் மெய்யுமாக பிடிபட்டமை, சொன்ற வருடம் இது சம்பந்தமாக சவ்தி அதிகாரிளுக்கு இலங்கை மக்களால் வழங்கப்பட்ட புகார்கள் போன்றவற்றின் காரணமாக இம்முறை பேஸாவிஸா 35 வரை குறைத்து வழங்கப்பட்டதாகவும் அறிகின்றேன்.

மேலும் இந்த 35 வீசாக்களில் 14 வீஸாக்கள் மட்டுமே 6 ஹஜ் முகவர்களிடையே ஹாஜிகளுக்கு எடுத்துச் செல்லும் ஒரு சில முகவர்களுக்கு இண்டு வீதம் வழங்கப்பட்டதாகவும். அதிலும் 40 வருடங்களாக ஹஜிகளை ஹஜ் கடமைக்கு அழைத்துச் சொல்லும் சில முகவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், கமிட்டியின் அலுவலகத் தேவையுடையவர்களுக்காக சில வீஸாக்கள் போக, மீதி வீஸாக்கள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக சில தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

மேலும் இவ்வாறு ஒரு ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்ட இரு பேஸா வீசாவில் ஒரு வீஸாவை ஒரு ஹாஜிக்கு வழங்கி அதற்கான முழுமையான பணத்தை அறவிடவும், அரசியல்வாதிகளால் பரிந்துரை செய்யப்படும் ஒருவரை இலவசமாக அழைத்துச் செல்ல நிர்பந்திக்கப்பட்டதாகவும் வீஸா பிரச்சனையின் போது சமூக ஊடகங்களில் வெளியான குரல் பதிவுகள் சாற்சி பகர்கின்றன. எனவே இது தொடர்பாகவும் மக்களுக்கான விளக்கத்தின் போது தங்களின் கவனத்தில் கொள்ளும்படி பணிவுடன் நினைவு படுத்துகிறேன்.

அலுவலகத் தேவையுடையவர் என சிலர் பயணித்த போது, அதனோடு சேர்த்து அலுவலகத்தில் பணியுரியும் சில தேவையற்றவர்களும் பயணித்ததாகவும், இவர்கள் பல வருடங்களாக தொடர்ந்து பயனிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கான பயணச் செலவுகள் அத்தனையையும் ஹஜ் கமிட்டி செலுத்துவதோடு, விமான டிக்கெட் தங்குமிட வசதி சாப்பாடு அரபா கூடாரம் அத்தனையும் இலவசமாக கிடைக்கும் நிலையில், சில அதிகாரிகள் கைச் செலவாக 4000 அமெரிக்க டாலர்களை, இலங்கை நாணயப்படி 12 லற்சம் ரூபாய்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தகவல் வழங்கிய அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். இது பொதுமக்கள் நிதி என்பதனால் இது தொடர்பான விளக்கத்தை முகத்துக்கு கட்டாயம் விளக்குவீர்கள் என நினைக்கிறேன்.

கௌரவ தலைவர் அவர்களே ! 

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதில் ஒரு பத்து விதமான மக்களே வசதியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகின்றனர்.
ஏனைய அனைவரும் சிறிது சிறிதாக பல வருடங்களுக்கு பணத்தைச் சேர்த்து, அதிலும் கிரமப்புர பகுதிகளில் வீடுகளில் கோபித்துள் விற்றும், இடியப்பம் விற்றும் ஆசையுடன் சேர்த்த, வியர்வையும் இரத்தமும் கலந்த பணமே ஹஜ் கமிட்டியில் உள்ளது என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்நிலையில் இவ்வாறான வியர்வை சிந்திய பணத்தை கண்டபடி சூறையாடுவதற்கு அதிகாரிகளுக்கும், அரசயல் வாதிகளுக்கும் எவ்வாறு மனம் இடமளித்தது என்பதையும் தங்களிடம் கவலையுடன் வேண்டி நிற்கின்றேன்.

மேலும் இம்முறை ஒவ்வொரு ஹாஜிகளும் zone 2 அரபா கூடாரத்துக்காக 1200 ரியால்களை செலுத்தினார்கள். இருந்தபோதிலும் எமது நாட்டில் ஏற்பட்ட ஹஜ் குழப்பங்களின் காரணமாக, வழக்குகள் என இறுதியாகவே நாம் கூடாரங்களுக்கான கட்டணங்களை செலுத்த வேண்டிய ஏற்பட்டது. இதன் காரணமாக எமது நாட்டவர்களுக்கு zone 4 கூடாரமே கிடைத்தது. Zone 4 வில் இருந்த் ஜம்ராத்துக்கு சுமார் 3.5 km
நடக்க வேண்டியுள்ளது. அதற்கான கூலியை அல்லாஹ் வழங்குவான்.

அனாலும் நமது ஹாஜிகள் பணத்தை கட்டி போதிலும் நமது பிழைகளால் நமக்கு வாய்ப்பு நழுவிப்போனது. கடும் வெயிலில் வயோதிபர்கள் தூரம் நடக்க வேண்டியளளது. இதற்காக பொறுப்புச் சொல்பவர்கள் யார்? இது யாரின் பிழை.

அதோடு Zone 2 வக்காக ஹாஜிகளால் 34 கோடிகள் செலுத்தப்பட்டாலும் Zone 4 கிடைத்ததால் 600 ரியால் மீதம் அறவிடப்பட்டுள்ளது. எமது 3500 ஹாஜிகளின் பணம் 17 கோடிகள் தூதுவர் காரியத்தில் தேங்கி கிடப்பதாக அறியக் கிடைத்தது. இப்பணம் 3500 ஹாஜிகளுக்கு மீதி 49000/= ஆயிரம் வீதம் பகிர்ந்தளிக்கப்படுமா?  இது சம்பந்தமாகவும் உண்மை என்ன என்பதையும் சமூகம் அறிய முடியுமா?

மேலும் ஒவ்வொரு ஒரு ஹஜ் முகவர்களிடமிருந்தும் ஒவ்வொரு வருடமும் 150000/= பதிவுப் கட்டணமாக அறவிடப்படுகின்றது. 93×150000 = 13 கோடிகள் 
இது போக ஒவ்வொரு ஹாஜியிடம் இருந்தும் 4000/= ரூபா அறவிடப்படுகின்றது. 3500×4000= 14 கோடிகள்.
இப்பணம் நம் எங்கே கிடக்கின்றது, இதன் நிலை என்ன? அரச அங்கீகாரத்தைப் பெற்று
சமூக எழுச்சிக்காக இப்பணத்தை பயன்படுத்த முடியாத என்பதையும் தங்களிடம் வினவுகின்றேன்.

முன்னேய காலங்களில் சவுதி அரேபியா மன்னரின் இலவச ஹஜ் செய்யும் வாய்ப்பு (Royal Guest) நமது நாட்டுக்கு கிடைத்த போது, பள்ளிவாசலுக்கு வரும் வயதான தக்குவாதாரிகளை தேர்ந்தெடுத்து, குலுக்கல் முறையில் அவர்களை தெரிவு செய்து, மஹல்லாவில் வாழும் இளம் வயதுடையவர்கள் தங்கள் சந்தர்ப்பங்களை வயதானவர்களுக்கு வழங்கி, முதியவர்களுக்கு வாய்ப்புக்களை அளித்து, ஆனந்தக் கண்ணீர் சிந்திய அரிய அழகான சந்தர்ப்பங்களை அன்று கண்கூடாக கண்டோம். இவ்வாறான ஒரு சந்தர்பத்தை என் வாழ்கையில் ஒரு நாள் பேருவளை மஸ்ஜிதுர் ரஹ்மானில் என் கண்களால் கண்டேன்.
இன்று அதுவும் அரசியலாக மாறிவிட்டது.

ஹஜ் கடமையை செய்ய வசதியற்ற, வயது வந்த தக்வாதாரிகளுக்கு, வறிய மக்களுக்காக வழங்கப்படும் மன்னரின் விஷேட வருந்தினராக (Royal Gust) இலவசமான ஹஜ் செய்யும் சந்தர்ப்பத்தை அரசியல்வாதிகள் தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்களுக்கும் பல்வேறு பல துறைகளிளும் உள்ளவர்களுக்கும் தமது விருப்புக்குறியவர்களுக்கும் பகிர்ந்தளிப்பது, இதை ஆயிரம் பேர் பாராட்டினாலும் கொடுப்பவரின் நோக்கம் நிறைவேறாது போவது பற்றி மார்க்க தீர்ப்பின்படி இதன் நிலைப்பாடு என்ன என்பதையும் தாங்களிடம் வேண்டி நிற்கின்றேன்.

நிலமை இவ்வாறு தொடருமானால் வரும் காலங்களில் சொந்த காசைக் கொடுத்து ஹஜ் செய்யவும் அரசியல் வாதிகளின் போஸ்டர்களுக்கு பசை பூச வேண்டி வருமா எனப் பயப்படுகின்றேன்.

மேலும் நமக்கு அண்மையில் உள்ள இந்திய நாட்டில் ஹஜ் கட்டனமாக இலங்கை நாணயப்படி 12 லற்சங்களை மட்டும் அறவிடப்படுவதாக அறிகிறேன். அதேவேளை நமது நாட்டில் மட்டும் 20 முதல் அறவிடுவது ஏன்? இதைப் பற்றி தாங்கள் சிந்திக்காதது ஏன்? 
ஹஜ்ஜுக்குரிய கட்டணங்கள் தங்கும் இடங்களை பொறுத்தே வித்தியாசப்படுகின்றன. இக்கட்டணங்களை குறிப்பிட்டு ஒரு வரையறைக்குள் கட்டுப்பாட்டிற்குல் வைத்திருக்காமல் விட்டிருபதை பற்றி விளக்க முடியமா ? மாபியாக்களுக்கு கொள்ளையடிக்க சந்தர்ப்பம் வழங்கி விட்டிருப்பது ஏன் ? இதனால் தான் இன்று ஆசையுள்ள ஒரு சாதாரண மனிதனுக்கு ஹஜ் கடமையை செய்து கொள்ள முடியாது இருப்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

ஹஜ் செய்ய ஆசை இருந்தும் கணக்கை நினைத்து கலங்கி நிற்கும் தாய் தகப்பன்ர்களுக்காக இந்தக் கேள்வியை கவலையோடு முன்வைக்கின்றேன்.

ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகம் என்றால் நம்பிக்கைக்குறியவர்கள்
விசுவாசமுடையவர்கள் என்ற நிலை மாறி, முஸ்லிம்கள் என்றால் நம்பிக்கை துரோகிகள்,
பள்ளிவாசல் சொத்துக்களை சூறையாடுபவர்கள், வக்பு சொத்துக்களை திருடுபவர்கள், அனாதை இல்லங்களின் சொத்துக்களை சூரையாடுபவர்கள் என்று இன்று மாறியிருக்கும் செய்திகளை
கசப்பாயினும் சுவைக்கத்தான் வேண்டும். 

கௌரவ தலைவர் அவர்களே!

அவர்களே ஹஜ் கமிட்டியின் கணக்கு வழக்குகள் பற்றி, இரண்டு முறை இலங்கை கணக்காய்வு திணைக்களத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்ற செய்தியை ஒரு Social Media வில் ஒளிபரப்பான ஹஜ் சர்ச்சை ஒன்றின் முலம் அறிமுடிந்தது. இருந்தாலும் முஸ்லிம்களின் ஹஜ் விவகாரம் என்ற காரணத்தினால் இச்செய்திகள் வெளியே வரவில்லை என நினைக்கிறேன்.

இவ்வாறான ஒரு தூய நிறுவனம், இந்த நிலைக்கு மாறியது ஏன் என்பது பற்றி சமூகம் தெரிந்து கொள்வது அவசியமாகும் என நினைக்கின்றேன்.

இவ்வாறான நிலைமைகள் தொடர்வதனால் என்றோ ஒரு நாள், நமது சமூக விவகாரத்தில் மூன்றாம் நபர் மூக்கு நுழைக்க நாமே சந்தர்ப்பத்தை வழங்குகின்றோம் என்பதை சிந்திக்க தவறுகின்றோம்.

மூன்றாம் தரப்புக்கு எந்த விதமான 
உரிமையும் பிரச்சனையும் இல்லாத காதி நீதி மன்றத்திற்கு, முஸ்லிம் சமூகத்திற்கு நலவு செய்கின்றோம் என்ற தோரணையில், மூன்றாம் தரப்புக்கு மூக்கு நுழைக்க நாமே சந்தர்ப்பம் வழங்கியதும், வழங்கிக் கொண்டிருப்பதும் நாமேதான் என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

இறுதியாக ஒரு கேள்வியை கேட்டு முடித்துக் கொள்கின்றேன். உங்களுக்கு கீழுள்ள உறுப்பினர்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறுகின்றனர் என இரு முறை தாங்கள் இராஜினாமா செய்வதை ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். இருப்பினும் திரும்பவும் நீங்கள் எவ்வாறு எந்த நிபந்தனையின் அடிப்படையில் பதவி அமர்த்தபட்டீர்கள் என்பதையும் சமூகம் அறிய விளக்குவீர்கள் என நினைக்கிறேன் 

எனவே தொடர்ந்து வரும் காலங்களில் இவ்வாறான புனித காரியங்களுக்கு, மற்றும் வணக்கங்களில் இவ்வாறான மோசடிகள் நடைபெறக்கூடாது என்ற அவாவுடனும், இனிவரும் காலங்களில் இவ்வாறான இடங்களுக்கு ஊழல்வாதிகள், அரசியல் வாதிகளின் எடுபிடிகள், நியமிக்கப்படக்கூடாது, கலாச்சாரத் திணைக்களம், வக்புசபை, ஹஜ் கமிட்டி போன்றவை சுதந்திரமாக, படித்த மக்களைக் கொண்டு, பண்புள்ள மக்களைக் கொண்டு இயங்க வேண்டும்.

தொடர்ந்து வரும் காலங்களில் அரசியல்வாதிகள் அவர்களை எடுபிடிகள் தவறான வழியில் நடக்க முயற்சிக்கும் போது, ஒரு மூத்த தலைவர் என்ற வகையிலும், அனுபவசாலி என்ற வகையிலும், மார்கத்தை அறிந்தவர் என்ற வகையிலும், அவர்களுக்கான போதிய அறிவுறுத்தர்களையும் வழங்கி சிறந்த முறையில் வழிநடாத்தப்பட வேண்டும் என்ற ஆசையுடனும், கவலையுடனும் எழுதி முடிக்கின்றேன்.

தொடர்ந்தும் சுத்தமான முறையில் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உங்கள் சகோதரன்
பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.