மாவனெல்லையில் நேற்று (06) இரவு ஒரு குழுவினரிடையே ஏற்பட்ட தகராறின்போது அங்கு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலை தீர்த்துவைப்பதற்காக சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
அவ்வேளை, சண்டையில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும், பின்னர், இன்னொரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரியையும் குறித்த நபர் தாக்க முற்பட்ட போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
எனினும், பொலிஸாரை தாக்க வந்த குறித்த நபரின் தந்தையே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிப் பிரயோகத்தால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் தகராறு இடம்பெற்ற பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்; அவர் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளோடு தொடர்புடைய குற்றவாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காமைடைந்த நிலையில், மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவரை கைது செய்ய மாவனெல்லை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.