புஸல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பொட பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக புஸல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று, மீண்டும் கொழும்புக்கு திரும்பிச் சென்ற வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த ஏழு பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக புஸல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை அந்த வேனில் பயணித்த மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், மூவர் பலத்த காயங்கள் ஏற்பட்டு இவர்கள் புஸல்லாவை வவுக்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகளை பார்வையிடச் சென்ற இஸ்லாமிய குடும்பத்தினர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.