கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்காணிக்க பொலிஸாரினால் புதிய CCTV கண்காணிப்பு கட்டமைப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறையானது இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி இன்று முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை கொழும்பு நகரில் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கொழும்பிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் 108 CCTV கமெராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிற்குள் நுழையும் 9 இடங்களிலும் CCTV அமைப்பு செயற்பாட்டில் உள்ளதாக சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகளும் போடப்பட்டுள்ளன.
இந்த நடைமுறையின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள பொலிஸ் பிரிவின் ஊடாக அதற்கான தண்டப்பணம் அறிவிடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.