வெலிகமைப் பகுதியில் மாணவன் ஒருவரை மூர்க்கத்தனமாக மெளலவியொருவர் சம்பந்தமான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பதியப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து அது தொடர்பான விபரங்களை திரட்டி சட்ட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பான காணொளிகளும் விபரங்களும் ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு பிரிவிற்கு சிலரால் அனுப்பி வைக்கப்பட்டதோடு, இது தொடர்பாக புகாரும் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம் கலாச்சார அமைச்சின் மதரஸாக்களுக்கு பொறுப்பான பிரிவு இதற்கான விசாரணை ஒன்றை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வரையில் குறிப்பிட்ட மதரசாவை மூடிவிட உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர் பல நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில், 22 ஆம் திகதி வெலிகமை
சிறுவர் பாதுகாப்பு போலீஸ் பிரிவில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட சந்தேக நபர் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருந்த நிலையில், அவரை போலீஸ் பிணையில் செல்ல அனுமதித்ததாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் வெலிகமை சிறுவர் பாதுகாப்பு பொலீஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடு சபையின் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெலிகமை சிறுவர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்தது.
-பேருவளை ஹில்மி