பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பால் என்ன ஆகும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பால் என்ன ஆகும்?


பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து VAT திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார்.


“பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டம் மற்றும் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை  (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பொருளாதாரம் தொடர்பான விசேட அறிவுள்ள ஒரு சிலர் கூட ஜனவரி முதலாம் திகதி முதல் VAT அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவு மேலும் 40,000 ரூபாவினால் அதிகரிக்கும் என்ற கருத்தை கூட சமூகமயப்படுத்துவதாகவும், ஆனால் அந்த கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.


மேலும், கல்விச் சேவைகள், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட ஏறக்குறைய 90 வகையான பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், சிறப்பு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ள 65 வகையான பொருட்களுக்கு VAT விதிக்கப்படாது என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.


உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் ஏ. எம். நபீர், ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம். ஜே. குணசிறி மற்றும் பணிப்பாளர் கே. கே. ஐ. எரந்த, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜனக எதிரிசிங்க ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.


மேலும் இங்கு கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா,


2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் VAT விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 20 வருடங்கள் கடந்துள்ளன. ஆரம்ப கட்டத்தில், VAT இரண்டு சதவீதமாக இருந்தது, ஆனால் பின்னர் அது மூன்று சதவீதமாக  திருத்தப்பட்டது. இவ்வகையில், அவ்வப்போது வெவ்வேறு மதிப்புகளில் இருந்த இந்த VAT வரி சதவீதம், 2019 இல் செய்யப்பட்ட வரித் திருத்தங்களால் 8% ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் அரச வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. பின்னர் அது 15% ஆக உயர்த்தப்பட்டது.


கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட VAT வரி திருத்தச் சட்டம் மூலம், 2024 ஜனவரி 01 முதல் VAT விகிதத்தை 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேலும் எம்மால் சலுகைகளை அடிப்படையாக கொண்டு முன்னோக்கிச் செல்வது கடினம். அரச வருமானத்தை அதிகரிக்கும் அத்தியாவசியமான காரணத்தினால் இந்த வரித் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கூற வேண்டும். இதற்குத் தேவையான பல்வேறு வரித் திருத்தங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


2019 ஆம் ஆண்டாகும்போது VAT வரிக்காக பதிவு செய்யப்படும் எல்லை 15 மில்லியனாக காணப்பட்டது. ஆனால் 2020 ஜனவரி 01 முதல் அந்த எல்லை 300 மில்லியனாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் வற் வரிக்கு பதிவு செய்யப்பட்டிருந்த ஏராளமான வரிக் கோப்புகள் செயலிழந்தன. ஆனால் பின்னர் அது 80 மில்லியனாகக் குறைக்கப்பட்டது. புதிய திருத்தத்தின்படி 2024 ஜனவரி 01 முதல் 60 மில்லியன் ரூபாவாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான வரி விலக்குகளை நீக்க புதிய திருத்தத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் இழந்த பெரும் வருமானத்தை மீட்பதே இதன் நோக்கமாகும்.


ஆனால் சிலர் இந்த நடவடிக்கை குறித்து தவறான கருத்துக்களை சமூகமயமாக்கி வருகின்றனர். ஜனவரி 01 ஆம் திகதி முதல் வாழ்வது கடினம் என்றும், வரி திருத்தத்தால் ஒரு குடும்பம் பெரும் செலவைச் சுமக்க நேரிடும் என்றும் சிலர் கூறுகின்றனர். வரி திருத்தம் காரணமாக சில மேலதிக செலவுகள் ஏற்படும் என்றாலும், சிலர் கூறும் அளவுக்கு அது அதிகமானதாக இருக்க மாட்டாது என்பதையும் தெரிவிக்க வேண்டும். மேலும், பெறுமதி சேர் வரி உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி, உரிய வரி திருத்தங்களை செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே எடுத்து வருகிறது.


எடுத்துக்காட்டாக, சில பொருட்களை இறக்குமதி செய்யும் போது துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி விதிக்கப்படும். வற் வரி அதிகரிப்பின் தாக்கத்தை குறைக்க அந்தப் பொருட்களில் இருந்து துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியை நீக்கி வற் வரியை மாத்திரம் விதிப்பது போன்ற சாதகமான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட உள்ளன.


ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே. கே. ஐ. எரந்த,


பெறுமதி சேர் வரி என்பது நமது நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் காரணிகளில் பிரதானமானதாகும். 2023 ஆம் ஆண்டில் VAT வரி மூலம் 600 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் சுமார் 450 பில்லியன் மாத்திரமே பெறப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்கு VATவரி மூலம் சுமார் 1400 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்பு எவ்வாறு இருந்தாலும், வெளிவாரி, உள்ளக மற்றும் வரி விலக்கு போன்ற வரிக் கசிவு போன்ற காரணிகளால் இந்த வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். இதன் காரணமாக வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வரி விலக்குகளை குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஆனாலும், மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விலக்குகள் நீக்கப்படவில்லை.


கல்வி சேவைகள், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, உணவு, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட சுமார் 90 வகையான பொருட்களுக்கு VAT வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.


மேலும், நெத்தலி, பெரிய வெங்காயம், கருவாடு போன்ற சிறப்பு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ள 65 வகையான பொருட்களுக்கு VATவரி தாக்கம்  செலுத்தாது.


இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்ஜனக எதிரிசிங்க


உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையை பேணுவதே இலங்கை மத்திய வங்கியின் முதன்மையான நோக்கமாகும். இதன்படி, புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் மூலம், நாட்டின் பணவீக்கம் காலாண்டு அடிப்படையில் 3-7% வீதத்தில் பேணப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் இணைந்து வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளன. பணவீக்கத்தை 5% ஆக வைத்திருப்பதே எமது இலக்கு ஆகும். வரி திருத்தமும் பணவீக்கத்தில் தாக்கம் செலுத்துகின்றது. பாதிக்கிறது. நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 3.4% ஆக பதிவாகியுள்ளது.


ஒரு குடும்பம் பொதுவாக 4 உறுப்பினர்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, கடந்த நவம்பரில் ஒரு குடும்பத்தின் சராசரி மாதச் செலவு 177,687.44 ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு சராசரி குடும்பத்தின் மொத்த செலவு 40,000 ரூபாயால் அதிகரிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


இருப்பினும் மத்திய வங்கியினால் எதிர்வுகூறப்பட்டிருந்த விதம், வரி திருத்தத்திற்கு முன்னரான பணவீக்கம் தொடர்பிலான எதிர்வுகூறல்கள் மற்றும் வரி திருத்தம் தொடர்பில் கருத்துக்கள் கூறப்பட்டதன் பின்னரான எதிர்வுகூறல்களுக்கு இடையிலான வேறுபாடுகளை பார்க்கும் போது விலை அதிகரிப்புக்கு ஏற்ப எந்த அளவு பணவீக்கம் அதிகரிக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.


இந்த வரி திருத்தத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான 2-3% வரையில் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெறுமதிசேர் வரிக்கு உட்பட்ட  பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி சரியான வரிவிதிப்பை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசியமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சும், உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் அறிவித்துள்ளன. அதனால் தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ள விகிதம் மேலும் குறைவடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. முழுமையாக பார்க்கும் போது டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் குடும்பமொன்றின் மாதாந்த செலவு 40,000 ரூபாயாக அதிகரிக்க முடியாது. அவ்வாறான கருத்துகள் தொடர்பில் கவலை தெரிவிக்கிறோம்.


ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி


இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் அரச வருமானம் மூன்று ட்ரில்லியன்களை எட்டியுள்ளது. நாம் இவ்வருடத்தில் 2850 மில்லின்களை மட்டுமே வருமானமாக ஈட்ட முடியும் என கணித்திருந்தோம். தற்போதும் அந்த இலக்கை கடந்துச் சென்றுள்ளோம்.


இருப்பினும் 2023 இல் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வரி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியிருந்தாலும் மக்களுக்கு அவசியமான அனைத்து சேவைகளையும் தட்டுப்பாடின்றி வழங்க எதிர்பார்க்கிறோம். எவரேனும் ஒருவர் அசாதாரணமாக பொருட்களின் விலையை அதிகமாக விற்பனை செய்யும் பட்சத்தில் அரசாங்கமும் மக்களும் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமையும் உள்ளது. மற்றைய நாடுகளின் மொத்த தேசிய உற்பத்திக்கு நிகராக 6-8% இனால் வரியும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு நிகராக இவ்வருடத்தில் 2.2% ஆகவே வற் வரி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.    


2024 மொத்த தேசிய உற்பத்திக்கு இணையாக 4% வரி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும் அது போதுமான அளவாக அமையாது. அதனால் பொருளாதார செயற்பாடுகளை சரியான முறையில் முன்னெடுக்கும் நீண்டகால பொறிமுறையொன்று அவசியப்படுகிறது.  அதனால் 2024  வரவு செலவு திட்டத்தின் ஊடாக டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.


உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் ஏ.எம்.நபீர்


பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்படி வரிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை சார்ந்துள்ளது.  2022 ஆம் ஆண்டில் 73,444 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தோடு, இவ்வருடத்தின் நவம்பர் மாத இறுதியில் 81,909 ஆக மேற்படி எண்ணிக்கை அதிகரித்திருந்தது.


தனி நபர்கள்கள் என்ற வகையில் 2022 ஆம் ஆண்டில் 204,467 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இவ்வருடத்தின் நவம்பர் மாத இறுதியில் 500,196 ஆக அந்த எண்ணிக்கை அதிகரித்தது. பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 13,776 - 15,579 அதிகரித்துள்ளது. வருமானம் ஈட்டும் போதான வரிக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 41,636 - 242,679 ஆக அதிகரித்துள்ளது. வற் வரிக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,604 -13,546 அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 1025 பில்லியன்களாக காணப்பட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 2020 ஆம் ஆண்டில் 500 பில்லியன்களாக குறைவடைந்திருந்தாலும் இவ்வருடத்தில் 1500 பில்லியன்கள் வரையில் அதிகரித்துக்கொள்ள முடிந்தது. 


இந்த நிலைமை எதிர்வரும் நாட்களில் நீடிக்ககூடும். 2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை தவறாக புரிந்துகொள்ள கூடாது. பதிவு இலக்கம் மற்றும் வரிக் கோப்புக்களை திறத்தல் என்பன இரண்டு காரணிகளாகும். அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்மொன்று இருப்பதை போலவே TIN Number இருக்க வேண்டியதும் அவசியமாகும். வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.  


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.