வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்குவதற்கென முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 10 பாடசாலைகளுக்கு செவ்வாய்க்கிழமை (19) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் 05 பாடசாலைகளுக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோட்டத்தில் 03 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த குடும்பங்கள் தங்குவதற்கென கிளிநொச்சி தெற்கு வலயத்தில் இரு பாடசாலைகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளதாகவும் மழை அதிகரிக்குமானால் பல குடும்பங்கள் பாடசாலைகளை நோக்கியே இடம் பெயர வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
இதேவேளை, தொடரும் மழையினால் இயங்கிக் கொண்டிருக்கும் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.