வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 102 கைதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தப்பிச்சென்ற மேலும் 37 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நேற்று (11) கைதிகள் சிலர் தப்பியோடியதை அடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இருதடவைகள் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு, தப்பியோடியவர்களைக் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகியவர்களை கைது செய்து புனர்வாழ்வுக்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய சுமார் 500 மேற்பட்டோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை மாலை பாதுகாப்பு வேலியை உடைத்து 50 கைதிகள் தப்பி ஓடியதையடுத்து அவர்களை பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவு 7.00 மணியளவில் 80 பேர் மீண்டும் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பியோடிய நிலையில் இரவிரவாக இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரு சம்பவங்களிலும் தப்பியோடிய 130 பேரையும் கைது செய்துள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் எனவே, இங்கு இருக்க முடியாது தங்களை சிறைச்சாலையில் அடைக்குமாறு கோரியே இவர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.