வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று (30) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றயதினம் இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த தம்பதிகள் வியாபார நிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வியாபாரநிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் வயது 72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என திருட்டில் ஈடுபடும் போது இடம்பெற்றதா என்ற கோணத்திலும் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்