காஸா மக்கள் வெளியேறுவதில் சிக்கல்: மருந்து, எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கும் மருத்துவமனைகள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காஸா மக்கள் வெளியேறுவதில் சிக்கல்: மருந்து, எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கும் மருத்துவமனைகள்

காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதி நோக்கி வெளியேற வேண்டும் என பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் விதித்த கெடு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், காஸா மக்கள் மொத்தமாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காஸா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளஆயிரக்கணக்கான பொதுமக்கள், மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அபாயம் ஏற்ட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி பலமுனைத் தாக்குதல் நடத்தினா். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் இந்தப் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துவிட்டனா்.

இந்நிலையில், காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினரை முற்றிலும் அழிக்கும் நோக்கில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. மேலும், காஸாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 10 லட்சம் மக்கள் தெற்குப் பகுதிக்கு வெளியேற 24 மணி நேரம் கெடு விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்தக் கெடு முடிந்துவிட்ட நிலையில், எச்சரிக்கை அறிவிப்பை விளக்கும் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வான்வழியாக காஸா மீது ஞாயிற்றுக்கிழமை வீசியது இஸ்ரேல் ராணுவம். சமூக ஊடகங்கள் வாயிலாகவும் எச்சரிக்கை குறித்து மீண்டும் நினைவூட்டியது.

காஸாவின் தெற்குப் பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு சென்றாலும் பாதுகாப்பு நிச்சயம் இல்லை என்ற நிலையில் காஸா மக்கள் பரிதவித்து வருகின்றனா்.

இதையடுத்து, வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்வதற்கான ஒரே சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தாக்குதல் நடத்தப்படாது எனவும், அந்த நேரத்தில் மக்கள் வெளியேற வேண்டும் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ஆனால், குடிநீா், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் தட்டுப்பாட்டுக்கு இடையே தெற்குப் பகுதி நோக்கி மக்கள் வெளியேறி வந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் துயரம்: இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்காகவும், பாதுகாப்புக்காகவும் காஸாவில் உள்ள மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்துள்ளனா்.

எரிபொருளின்றி காஸாவில் அமைந்துள்ள ஒரே மின் நிலையம் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டது. எனவே, இன்னும் 2 நாள்களில் மின்-ஜெனரேட்டா்களுக்கான எரிபொருளும் தீரும் சூழலில், காஸா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு நகரமான கான் யூனிஸில் அமைந்துள்ள நசீா் மருத்துவமனையில் பெரும்பாலும் குழந்தைகள் உள்பட பலத்த காயமடைந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அந்த மருத்துவமனையில் திங்கள்கிழமையுடன் எரிபொருள் தீா்ந்துவிடும் சூழல் நிலவுகிறது. எரிபொருள் தீரும் நிலையில், மருத்துவமனை மொத்தமாக முடங்கி அனைவரும் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக அங்கு பணிபுரியும் மருத்துவா் தெரிவித்தாா்.

காஸா சிட்டியில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் உயிரிழந்தவா்களின் உடல்கள் பிணவறை முழுவதுமாக நிரம்பியதால் உறவினா்களின் இறுதி அஞ்சலியின்றி 100 உடல்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம் கண்டனம்: ‘மக்களை தெற்குப் பகுதிக்கு வெளியேற உத்தரவிட்டு கெடு விதித்திருப்பது, வடக்குப் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 2,000 நோயாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சமமானது என உலக சுகாதார மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமாதன முயற்சியில் அமெரிக்கா: பிராந்திய மோதல் தொடங்குவதைத் தடுக்கும் நோக்கில் 6 அரபு நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு திங்கள்கிழமை பயணம் மேற்கொள்கிறாா். பிரதமா் நெதன்யாகுவுடன் போா்நிறுத்த பேச்சுவாா்த்தையில் அவா் ஈடுபடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.