இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்டுள்ள காணொளி அடிப்படையற்றது என்றும், விசாரணைகள் இன்றி போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன் இன்று (07) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய இயக்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் கடிதமொன்றும் கையளிக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அங்குனுகல்லே ஸ்ரீ வினாநந்த தேரர்,
சேனல் 4 செய்தி சேவையால் வெளியிடப்பட்டுள்ள காணொளியின் ஊடாக இலங்கை புலனாய்வுப்பிரிவை இலக்கு வைத்து போலியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் போலியானவை என்பதைக் கூட உறுதிப்படுத்தாமலேயே அவை வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பாதுகாப்புத்துறையின் பிரதானிகளுக்கும் தெரிவித்துள்ளதோடு, போலியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் இவ்வாறான தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.
அத்தோடு, போலி தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சுயாதீன நாட்டின் புலனாய்வு பிரிவினர் மீது சுமத்தப்பட்டுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம். இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையே பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திலும் கையளித்துள்ளோம் என்றார்.