கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு நேற்று (03) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாவை அபராதமாக செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மூன்று வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நுவரெலியா, நானுஓயா மற்றும் லிந்துலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நுவரெலியா மாவட்ட எல்லைக்குட்பட்ட பல முக்கிய நகரங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதுடன், கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்தமை, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் விலைகளை காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் 16 சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.