தங்களது செய்தி வெளிப்பாட்டை அடுத்து கிரிப்டோ திட்டத்தை பிரமிட் திட்டம் என இலங்கை மத்திய வங்கி கூறுவதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
அத்துடன் போலி கிரிப்டோ திட்டத்தை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகளை இலங்கையின் மத்திய வங்கி பரிசீலித்து வருவதாகவும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட பல உள்ளூர்வாசிகள் போலி கிரிப்டோ திட்டத்திற்கு இரையாகி, தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்தனர்.
இந்த மோசடியை தாம், வெளிப்படுத்திய ஏழு மாதங்களுக்குப் பிறகு, ஸ்போர்ட்ஸ் செயின் எனப்படும் கிரிப்டோ முதலீட்டுத் திட்டத்தை நடத்திய குழுவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதாகவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தின் கீழ், பிரமிட் திட்டங்களை இயக்கினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அல்லது திட்டத்தில் பங்கேற்பவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.
இந்நிலையில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்களிடம் இருந்து 15 பில்லியன் இலங்கை ரூபாவை குறித்த பிரமிட் திட்டம் மோசடி செய்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.