அடுத்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த திங்கட்கிழமை (13) தெரிவித்தார்.
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை குறிப்பதில் இரண்டு வாரங்கள் தாமதம் ஏற்பட்டதன் விளைவாக இரண்டு அரச பரீட்சைகளுக்கு இடையிலான மூன்று மாத கால அவகாசம் குறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் உலகளாவிய தொற்றுநோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் போராட்டங்களுக்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 4,000,000 மாணவர்கள் மற்றும் 8,000,000 பெற்றோர்களின் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறிய அவர், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக வலியுறுத்தினார்.
சர்வதேச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கல்விக்கு எதிர்ப்புக்கள் தடையாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று காலை மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இலங்கை பாடசாலை உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார். கல்வி அமைச்சருடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கும் கலந்துகொண்டார்.
ஆசிரியர்கள், அதிபர்கள், விரிவுரையாளர்கள் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.
எனவே குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி விடைத்தாள்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். (யாழ் நியூஸ்)