
நாளை (02) 60 க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முதல் மொத்த ஊழியர்களில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடமே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன,
“நேற்று, 44 ரயில் பயணங்களை ரத்து செய்ய திட்டமிடப்பட்டது. இதுவரை 07 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இரு மடங்காக அல்லது மூன்று மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நாளை 60 முதல் 70 ஆக ஆகலாம், அப்படி நடந்தால், இயங்கும் ரயில்களுக்கு கொள்ளளவை தாங்க முடியாது போகும். பயணிகள் ரயில் நிலையங்களில் கூடுவதால் மோதல்கள் ஏற்படலாம். அலுவலகங்களுக்கு செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேவைக்கேற்ப சேவைகள் வழங்குவது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும் இந்த ஆட்சேர்ப்புகள் குறித்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருந்தது. உரிய முறையில் பணிபுரியாத, ஒன்றரை ஆண்டுகளாக ஒப்புதல் இல்லாமல் பணிபுரிந்த 4 ஊழியர்களை ஊதியம் வழங்காமல் பணி நீக்கம் செய்ய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ரயில் நிலைய அதிபர்கள் பற்றாக்குறையை போக்க புதிய ரயில் நிலைய அதிபர்கள் பணியமர்த்தப்பட்டாலும், 2013 முதல் அந்த பணியிடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதன்காரணமாக மாத்தறை முதல் பெலியத்த வரையான ரயில் நிலையத்தை எதிர்வரும் காலங்களில் மூட வேண்டியுள்ளது.
அடுத்த வாரத்தில் இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ரயில்வே திணைக்களத்தின் இந்த வீழ்ச்சியை கண்டித்து எதிர்வரும் 9ஆம் திகதி வரை கண்டிப்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.