
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்றுதான் 3 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வந்தது. கோடிக்கணக்கானோர் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தனர். உயிரிழப்பு ஒருபுறம் என்றால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றது. இவ்வாறு உலகையை உலுக்கிய கொரோனா தொற்று இத்துடன் முடிந்துவிட்டது என அனைத்து நாடுகளும் நிம்மதி அடைந்த நிலையில், சீனாவில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தீவிரம்
சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் ஒருபகுதியாக, வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.
கட்டுப்பாடுகளை தூக்கும் சீனா
கொரோனா தொற்று பரவலை எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டும் என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், சீனாவோ அதற்கு தலைகீழான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுதான் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த 2020-ம் ஆண்டு முதலாகவே கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் அமலில் இருந்தன. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் விளைவாக இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அங்கு கொரானோ பரவல் உச்சம் தொட்டுள்ளது.
மீண்டும் கொரோனா அலை - நிபுணர்கள் எச்சரிக்கை
சீனாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது, சீனாவில் அமலில் இருக்கும் ஒன்றிரண்டு கொரோனா கட்டுப்பாடுகளையும் அந்நாட்டு அரசு நீக்கி வருகிறது. அந்த வகையில், விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக சீன அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை, தொற்று பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துதல் என அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது சீனா. இதனால் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் யாருக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாததால் மீண்டும் உலக நாடுகள் அனைத்துக்கும் கொரோனா அலை ஏற்படும் என வைரஸ் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.