
26 வயதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சனிக்கிழமை காலை தனது நண்பர்களுடன் இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதியதன் பின்னர் விபத்துக்குள்ளாக்கியுள்ளார். கொள்ளுப்பிட்டி காலி வீதியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று அன்றைய தினம் டுபாய் சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன், காரில் பயணித்த இருவரில் பெண் ஒருவர் விபத்தை நேரில் பார்த்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (12) இரவு டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய அவர், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)