ஜனாஸா எரிப்பை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமியுங்கள்! ஹக்கீம் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா எரிப்பை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமியுங்கள்! ஹக்கீம் கோரிக்கை!

"உலக சுகாதார நிறுவனம் கொரோனா ஜனாஸாக்களை எரிக்கவும் முடியும், அடக்கம் செய்யவும் முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிய போதிலும், எங்களது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து படுபாதகச் செயல்களைச் செய்தார்கள். அதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய இந்த ஜனாதிபதி ஒர் ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்" என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 ஆவது பேராளர் மாநாடு ,புத்தளம் கே.ஏ, பாயிஸ் ஞாபகார்த்த மண்டபக் கேட்போர் கூடத்தில் (7) நடைபெற்றபோது அங்கு பிரதான உரை ஆற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

பல விதமான விபரீதங்கள் இந்த கட்சிக்குள் நிகழ்ந்தாலும், இந்த இயக்கம் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சந்தித்த சவால்களுடன், 2020 மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதோடு சேர்த்து நிறைய அட்டூழியங்களையும், அநியாயங்களையும் நாம் அனுபவித்தோம்.

சஹ்ரான் என்கின்ற பயங்கரவாதி எங்களுக்குள் ஒளிந்திருந்தான் என்பதை நாம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த படு பாதகச் செயலை அடிப்படையாக வைத்து முஸ்லிம் சமூகத்தின் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு, ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் ; அதிகமான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அவர்களது அரசியல் களம் பக்கச்சார்பாக இயங்குவதற்குச் சாதகமாக, திட்டமிட்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாக வைத்து இந்த முஸ்லிம் சமூகத்தின் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. இப்படியான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒரு ஜனாதிபதித் தேர்தலை முன்னிருத்தி, இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தை உசுப்பேத்தி அட்டுளுகம, அக்குறணை போன்ற இடங்களை மாதக்கணக்கில் முடக்கினார்கள். அரச சார்பு ஊடகங்கள் முஸ்லிம்களை பிழையான கோணத்தில் காட்டி பிரசாரம் செய்தன.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா ஜனாஸாக்களை எரிக்கவும் முடியும்; அடக்கம் செய்யவும் முடியும் என்று விஞ்ஞான ரீதியாக திட்டவட்டமாகக் கூறியிருந்த போதிலும், எங்களது ஜனாஸாக்களை எரித்து படுபாதகச் செயல்களைச் செய்தார்கள். அந்த அவஸ்தைக்கு மத்தியில், இந்தப் பேராளர் மாநாட்டின் மூலமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்ததற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும், அதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய இந்த ஜனாதிபதி ஒர் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றேன். இவ்வாறான அநியாயம் இந்த நாட்டில் எந்தவொரு சமூகத்துக்கும் பலவந்தமாக இனிமேல் ஒருபோதும் நிகழ்த்தப்பட கூடாது.

தமிழ் மக்களுக்கு 30 வருட யுத்தத்தின் போது, நடந்த அநியாயங்களை நினைவு கூர்வதற்காக ஜெனிவாவில் முறைப்பாடுகள் தொடர்ந்தும் திரும்ப திரும்ப செய்யப்படுகின்றன. அநீதி இழைக்கப்பட்ட எங்களின் சார்பிலும் அவ்வாறான முறைப்பாட்டை ஜெனிவாவில் பிரேரணையை முன்மொழிந்த நாடுகள் உள்வாங்கின.

இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் இந்த அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களிப்பதை தவிர்ந்து கொண்டதும், எதிராக வாக்களித்ததற்கு காரணமாக அமைந்ததும் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கின்ற அந்த பிரேரணையாகும். இவற்றையெல்லாம் செய்து விட்டு, எல்லா அரபு நாடுகளின் தூதுவர்களும், இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் தூதுவர்களும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை குப்பைத் தொட்டியில் போட்ட ஜனாதிபதிக்கு ஈற்றில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். சதிகாரர்களை மிகைத்த சதிகாரன் மேலே இருக்கின்றான் என்பதில் முஸ்லிம்களான நாம் நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்த ஜனாதிபதி யாருடைய தயவில் ஜனாதிபதியானார் என்பது பிரச்சினையல்ல. ஆனால், இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு விடிவு காண வேண்டும். விடிவுக்காக முயல்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், இந்த பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்கின்ற போது, அவரின் அவ்வாறான முயற்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கவில்லை.

ஆனால், இன்று ஏராளமான விவசாயிகள் தங்களுக்கு உரம், மானிய விலைக்குக் கிடைக்கும் உரிய நேரத்திற்கு கிடைக்கும் என்று இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். "பெரும்போகத்தில் தருவோம் " என்று வழங்கிய வாக்குறுதி இன்னும் சரியாகவில்லை. சிறுபோகத்தின் விளைச்சலை சந்தைப்படுத்த மக்கள் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். நெல்லை உரிய விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்த்த அரசாங்கம் அதை சரியான முறையில் கையாண்டதாகக் காணவில்லை.

இந்த அரசாங்கம் எங்களது ஜனநாயக உரிமைகளின் மீது கை வைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் காட்டமாகக் கண்டிக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பவற்றை தடை செய்வதற்கும், சிவில் சமூக உரிமைகளில் ஈடுபடுவோரை பயங்கரவாத தடைச்சட்டத்தை பாவித்து கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆனாலும், இந்த பொருளாதார நெருக்கடியை கையாளும் முயற்சிகளில் உளப்பூர்வமாக ஜனாதிபதி செயற்பட்டார். அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால், சர்வ கட்சி அரசாங்கம் என கூறிக் கொண்டு உறுப்பினர்களை பின் கதவால் பறித்தெடுத்து அவ்வாறான போர்வையில் ஆட்சி அமைக்கின்ற அநியாயத்தை முஸ்லிம் காங்கிரஸ் அங்கீகரிக்கப் போவதில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த பேரியக்கம் வெறும் அமைச்சு பதவிகளுக்கு சோரம் போகும் இயக்கமல்ல. இந்த இயக்கம் அமைச்சு பதவிகளால் வளர்ந்த இயக்கமுமல்ல.இப்போது எதிர்கட்சியில் இருந்தபோதிலும் கூட, வீரியத்துடன் இந்த சமூகத்தின் நலன்களுக்காக மாறி மாறி ஆட்சியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக இந்த இயக்கம் வாழ வேண்டும்.

சர்ச்சைக்குரிய விடயமான முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிடும் கூட்டத்தினர் இருக்கின்றனர். இதில் ஒரு விடயத்தில் நாம் உடன்பட்டுக் கொள்ள வேண்டும். எங்களது பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை நாங்கள் கண்டு கொள்வது இல்லை. காதி நீதிமன்றத்துக்கு முன்னாள் நம் பெண்கள் படும் அவஸ்த்தையை நம்மில் எத்தனை பேர் கண்டுள்ளோம் என்பது தெரியாது.

இந்த சீர்கேடுகள், பிரச்சினைகள் என்பன காரணமாக மாற்றுத் தரப்பினர் கையில் இன்று இந்த "ஆயுதம் " போகின்றது. இதை சமூக ஆர்வம் கொண்ட பல அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து இஸ்லாத்தின் தனியார் சட்டத்துக்கு அமைவாக எங்களது முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகளைக் களைந்து சரியான முறையில் இந்த முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். அதில் ஒரு நிறைவுத் தன்மையோடு, மார்க்கச் சட்டத்தை விட்டுக் கொடுக்காமல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

எங்களைப் பொறுத்தமட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக வேண்டும். இளைஞர்கள் மத்தியில் அரசியல்வாதிகள் சம்பந்தமான பார்வை வித்தியாசமானது. அடுத்த தேர்தலில் வயது முதிர்ந்த ஆறு அரசியல்வாதிகளுக்கு சிறிது கஷ்டம்தான். அனைத்துக் கட்சிகளும் அரசியல் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இளம் தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும். நமது கட்சி மிக பலம் பெறுகின்ற ஒரு சந்தர்ப்பம் வரும். அடுத்த பரம்பரைக்கான ஓர் இயக்கமாக இதை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகள் தொடரும். அதே நேரம் இந்த இயக்கம் பயணிக்கும் பாதையில் எந்தத் தடைகள் வந்தாலும் அவை அனைத்தையும் மீறி வெற்றி கொள்கின்ற முயற்சியில் எங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக என்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.