நீண்ட இடைவெளியின் பிறகு, இம் மாதத்தில் பணவீக்கம் 3.8 சதவீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கை தெரிவித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, கடந்த செப்டெம்பர் மாத பணவீக்கம் 69.8 சதவீதமாக பதிவாகியிருந்ததுடன், ஒக்டோபர் மாதத்தில் அது 66 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, உணவுப் பணவீக்கமும் செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒக்டோபர் மாதத்தில் 9.3 வீதத்தால் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் 94.9 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், அக்டோபரில் 85.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அத்துடன், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஒக்டோபர் மாதத்தில் உணவு அல்லாத வகைப் பணவீக்கம் 56.3 வீதமாக பதிவாகியிருந்ததுடன், செப்டெம்பர் மாதத்தில் உணவு அல்லாத வகையின் பணவீக்கம் 57.6 வீதமாக பதிவாகியுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது சிறியளவு குறை சதவீதத்தை பதிவுசெய்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் 66 சதவீத பணவீக்கத்திற்கு, உணவு அல்லாத வகைகள் 37.9 சதவீத பங்களிப்பையும், உணவு வகைகள் 28.1 சதவீத பங்களிப்பையும் அளித்துள்ளமை அந்த அறிக்கை ஊடாக அவதானிக்க முடிகிறது.