துபாயில் வேலை தேடும் நபர்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் ஏஜென்சி ஒன்றில் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏஜென்சியின் நிர்வாகத்தை மேற்பார்வையிட பெண் வேறொரு நபரை பணியமர்த்தியதாகவும் அவர் துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துபாயில் வேலை வழங்குவதாக உறுதியளிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து சந்தேகநபர் ரூ. 450,000 க்கும் அதிகமான பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சந்தேக நபர் உறுதியளித்தபடி ஆடைத் தொழிற்சாலைகள் அல்லது சொகுசு வர்த்தக நிலையங்களில் வேலை வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
நிதி மோசடி தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேக நபரை கைது செய்ய SLBFE விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் SLBFE இல் பதிவு செய்யப்பட்டுள்ளதா மற்றும் பணம் கொடுப்பதற்கு முன்னர் அவை செல்லுபடியாகும் நிறுவனங்களா என்பதை சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு SLBFE ஐ அதன் ஹாட்லைன்களான 011-2864241 அல்லது 1989 மூலம் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் கோரப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)