
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (26) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.
ஜப்பானுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் ஜனாதிபதி, இந்த சுற்றுப்பயணத்தின் போது ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். .
அதன் பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் செல்ல உள்ளார்.
பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழும்புகே, ஊடக பணிப்பாளர் ஷனுக்க கருணாரத்ன, நிலையான அபிவிருத்தி பணிப்பாளர் ரந்துல அபேவீர மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் ஜனாதிபதியுடன் பயணம் செய்யவுள்ளனர்.
திறைசேரி செயலாளர் பிலிப்பைன்ஸ் விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார் ஆனால் தினுக் கொழும்பகே மற்றும் ரந்துல அபேவீர ஆகியோர் ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் அவர்களுடன் இணைந்து கொள்ள மாட்டார்கள். (யாழ் நியூஸ்)