
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், அதற்கு இணையாக நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாமையினால் முச்சக்கரவண்டி தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாமையினால் அதனை நுகர்வோரிடம் இருந்து அறவிட நேரிட்டுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தமது தொழில்துறையினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சர்வதேச சந்தையில் பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 91.35 அமெரிக்க டொலராகவும், டபிள்யு ரீ. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 85.11 அமெரிக்க டொலராகவும் காணப்படுகின்றன.
உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்திற்கொண்டு, இலங்கையில் அதற்கேற்ப மாதத்தின் 01ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானங்களை எடுத்திருந்தது. எனினும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதற்கு முன்னர் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் ஒரு லீற்றர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது.