வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக மலேசிய அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கையில் இருந்து 10,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் எம்.சரவணன் இன்று அறிவித்தார்.
இந்த முடிவுக்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பான தனது கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்டதற்காக மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட மலேசியாவின் மனிதவள அமைச்சர் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
கைத்தொழில், உற்பத்தி, சுற்றுலா, விவசாயம் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மலேசியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, கிடைக்கக்கூடிய வேலைகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
மலேசிய அரசாங்கத்திற்கு அமைச்சர் நாணயக்கார ஜூன் மாதம் அனுப்பிய கடிதம் இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. (யாழ் நியூஸ்)