
மியன்மார் இராணுவம் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இவர்களில் ஒருவர் திருவாட்டி அங் சான் சூ சியி கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது. பயங்கரவாத நடவடிக்கைகளை வழிநடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மரண தண்டனை முறைப்படி நடந்ததாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தண்டனை எப்போது, எப்படி மேற்கொள்ளப்பட்டது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதேபோன்று ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு மியன்மார் இராணுவம் மரண தண்டனை விதித்துள்ளது.
மியன்மாரில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
மரண தண்டனையைக் கண்டித்த எதிர்க்கட்சிகளும், மனித உரிமை குழுக்களும் குரல் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)