
காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதியான மக்கள் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ச நேற்று மாலை சுமார் 03 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பலர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தமது கடவுச்சீட்டை நீதிமன்ற காவலில் ஒப்படைக்கவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஏஎஸ்ஜி ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரை தமது கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக ஏஎஸ்ஜி ஜினசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது தனது கடவுச்சீட்டு அழிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாகவும், அமைதியின்மையின் போது ஒரு கும்பல் தாக்கி எரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் காஞ்சன ஜயரத்ன ஆகியோர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிசாந்த, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, ரோஹித்த அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, சம்பத் அத்துகோரல, காஞ்சன ஜயரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மஹிந்த கஹந்தகம, ரேணுகா பெரேரா, அமித அபேவிக்ரம, திலித் பெர்னாண்டோ மற்றும் புஷ்பலால்ஆ கியோருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே வழங்கிய உத்தரவின் பிரகாரம் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)