நோயாளியாக சிகிச்சை பெறச் சென்ற என்னை வைத்தியர் ஒருவர் இவ்வாறு சிகிச்சை அளிப்பார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 07ஆம் திகதி மாலை கொழும்பு லங்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சென்றிருந்தார். வைத்தியர் ரணில் ஜயவர்தனவிடம் சிகிச்சை பெற அமைச்சர் சென்ற போதும், வைத்தியர் சிகிச்சையளிக்க மறுத்து விட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது,
சம்பவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, வைத்தியர் என்னை பரிசோதனை செய்தார். அதன்படி 3 முறை அவரிடம் பரிசோதிக்க வேண்டியிருந்தது. மூன்றாவது முறையாக வைத்தியரை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றேன்.
எனது நோயாளி குறிப்புகளை பதிவிடத்தில் கொடுத்துவிட்டு, எனது முறை வரும் வரை சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் மருத்துவமனையில் காத்திருந்தேன்.
அப்போது அங்கிருந்த தாதியொருவர் எனது மனைவியை அழைத்துச் சென்றார். எனது உடல்நிலை குறித்து அவரிடம் தெரிவிக்க அவரை அழைத்துச் சென்றிருக்கலாம் என நினைத்தேன்.
மனைவி வந்து வாருங்கள் போகலாமென அழைத்துச் சென்றார். உள்ளே நடந்ததை சொன்னார். அப்போதுதான், வைத்தியர் சிகிச்சையளிக்க மறுத்த விடயம் எனக்கு தெரிய வந்தது.
வைத்தியரிடம் சென்று, ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு அரசியல்வாதிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் கூறினார். நான் பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் எனக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அந்த வைத்தியரிடம் சிகிச்சைக்கு சென்றேன். அப்போது கொடுக்கப்பட்ட மருந்துகளால் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக மீண்டும் வைத்தியரிடம் சிகிச்சை பெறச் சென்றிருந்தேன்.
இறுதியில் அந்தச் சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையில் இருந்து வர வேண்டியதாயிற்று.
வைத்தியரின் நடத்தை தொடர்பில் ஊடகங்களுக்கு நான் பேசவில்லை. அந்த வைத்தியர் ஒலிப்பதிவுகளை யூடியூபில் வெளியிட்டு ஹீரோவாக செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
ஒரு மருத்துவர் நோயாளியை சங்கடப்படுத்தியதன் மூலம் இவ்வளவு ஹீரோவாக மாறியிருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.