இன்றைய தினம் அமுலாக்கப்படும் 13 மணித்தியால மின்தடையை, 15 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மின்வெட்டு தொடர்பில் உரிய பொறியியலாளர்கள் தற்போது திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் இன்று மாலை 5.00 மணியளவில் மின் தடை ஏற்பட உள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் ஊடாக 165 மெகா வோட் மின்சாரம் தேசிய மின் கட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்படுவதால், நாட்டில் தேவையான மின்சாரத்தின் அளவில் 165 மெகா வோட் மின்சாரம் இழக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மாத்திரமே முழுமையானளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.