
இந்தியா, கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் மற்றும் காவித்துண்டு தொடர்பாக பெரும் பிரச்னை வெடித்துள்ள நிலையில், உயர் நீதிமன்ற முடிவை எதிர்பார்த்து மொத்த மாநிலமும் காத்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் புதிய பிரச்னை உருவானது. அங்குள்ள அரசு PUC கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் தலையில் முக்காடாக அணியும் ஹிஜாபை வழக்கம்போல் அணிந்து வந்தபோது வகுப்பில் அமரக் கூடாது என நிர்வாகம் கூறியது.
அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள அரசு கொப்பா கல்லூரியில் வேறுவிதமான பிரச்னை ஏற்பட்டது. அங்குள்ள மாணவர்கள், காவித்துண்டு அணிந்துவந்திருந்தனர். மாணவியர் ஹிஜாப் அணிவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். முஸ்லீம் மாணவியர் ஹிஜாப் அணிந்தால் தங்களையும் காவித்துண்டு அணிய அனுமதிக்க வேண்டும் என புதிய கோரிக்கையையும் வைத்தனர்.
இதனிடையே உடுப்பி பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவியர் தரப்பு, கர்நாடகா உயர் நீதிமன்றத்தை அணுகியது. அதன்பிறகு பிரச்னை பெரிதாயிற்று.
உடுப்பி மாவட்டத்தில் குந்தபூரா அரசு பியூசி கல்லூரியிலும் பிரச்னை வெடித்தது. சில மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வந்ததைத் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்த மாணவியரை அனுமதிக்காமல் கேட் பூட்டப்பட்டது. உள்ளே அனுமதிக்கும்படி கல்லூரி முதல்வரை மாணவியர் கெஞ்சும் வீடியோ வைரலானது.
இந்த விஷயத்தில் இரு தரப்புக்கும் ஆதரவாக பல்வேறு அமைப்புகள் களமிறங்கின. அதனால் சிக்மகளூர், பைந்தூர் மற்றும் பெலகாவி என பல்வேறு நகரங்களில் இந்த பிரச்னை பரவி பூதாகரமாக வெடித்து நிற்கிறது.
இந்நிலையில், கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார், கல்வி நிலையங்களுக்குள் மாணவியர் ஹிஜாப் அணிவதை ஆதரிப்போர் மசூதிகளில் பெண்கள் நுழைய அனுமதி பெற போராட வேண்டும் எனக் கூறியதற்கு கண்டனங்கள் எழுந்தன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. ஹிஜாப் அணிவதால் கல்விநிலையங்களில் மாணவியரை அனுமதிக்காதது இந்தியாவின் குழந்தைகளின் எதிர்காலத்தை பறிப்பது போன்றதாகும் என விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஒரு தவணை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை அமல்படுத்தும் மத்திய பாஜக அரசு மாநிலத்தில் பெண் குழந்தைகளை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி சாடினார்.
இதனிடையே இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ள கர்நாடக அரசு, கல்லூரி கமிட்டிகள் விதித்துள்ள விதிமுறைகளின்படியே மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற முடிவிற்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கிறது.
அதேநேரம் இன்று (08) கர்நாடகத்தில் மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்
இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமறத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள ஜூனியர் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான விசாரணை இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,
முன்னதாக, ஹிஜாப் சர்ச்சை மாணவர்களிடையே பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், கர்நாடக முதலமைச்சர் மாணவர்கள் அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

