தனியார் வைத்தியசாலையொன்றின் இலட்சினையைப் பயன்படுத்தி போலியான எதிர்மறையான பிசிஆர் சான்றிதழை தயாரித்த 27 வயதுடைய சந்தேக நபர் நீர்கொழும்பில் பெப்ரவரி 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
மினுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் வட்ஸ்அப் ஊடாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) விசாரணையில் சந்தேக நபர் சுமார் 70 போலியான பிசிஆர் அறிக்கைகளை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
மோசடியில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்களில் இவரும் அடங்குவதாக கண்டறப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரை வெல்லம்பிட்டிய பிராந்தியாவத்தையில் வைத்து காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் 750 பயணிகளுக்கு போலியான எதிர்மறை பி சி ஆர் சான்றிதழை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட 33 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று களுத்துறை நாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடையைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபருக்கு உதவியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் பெப்ரவரி 23 மற்றும் மார்ச் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.