எனது இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் ஒரு வெளிநாட்டுக் கடன் கூட பெறப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.
தற்போது நிலுவையில் உள்ள கடன்கள் கடந்த அரசாங்கத்தால் பெறப்பட்ட கடன்கள் எனவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு வருடமும் கடனுக்காக 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும் ஒரு குழுவாக பின்னடைவை சமாளிப்பது கூட்டுப் பொறுப்பு என்றார்.
ஒருவர் பின்னடைவுகளை நிர்வகிப்பதற்கு உதவாமல் குறைகளை மாத்திரம் விமர்சித்தால் அது அந்த நபரின் திறமையின்மையையே காட்டுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொவிட்-19 காரணமாக இழந்த இரண்டு வருடங்களை நினைத்துப் பார்க்காமல் அடுத்த மூன்று வருடங்களில் உறுதிமொழியாகக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு எம்.பி.க்கும் அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எவ்வாறாயினும் அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கக்கூடிய 30 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்குவதன் மூலம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடமை என ஜனாதிபதி தெரிவித்தார்.
அதிகாரிகள் முடிவெடுக்கும் போது நடைமுறை வழிகளைக் கண்டறிய வேண்டும். எந்தவொரு பணியையும் செய்யாததற்கு சுற்றறிக்கைகளை சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அடுத்த
மூன்று ஆண்டுகளுக்கு முழு ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி அனைத்து அரச சேவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார் .
எதிர்காலத்தில் மக்களுக்கான வலுவான அரச சேவையை உருவாக்குவதற்காக அரச நிறுவனங்களுக்கு நேரில் விஜயம் செய்வதாகவும், 'கம சமக பிலிசந்தர' வேலைத்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டு மக்களின் அபிலாஷைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"நமது தேசத்திற்கான நமது பொறுப்புகளை நாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)