ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிகழ்த்திய உரையின் முழு வடிவம் தமிழில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிகழ்த்திய உரையின் முழு வடிவம் தமிழில்!


நாட்டில் கல்வி நடவடிக்கைகளின் அபிவிருத்திக்காக புதிய தொழில்நுட்பம் மூலம், மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் போது மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தாம் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டதாகவும், இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் கூறினார்.

முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய விடுவிப்பதற்குக் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்திலும் அவ்வாறான பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபத்துக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் ஜனாதிபதி கோரினார்.

வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து, அந்த பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெல்வதற்கு, நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியேயும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள், இனியேனும் அதனை நிறுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை, ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டேயில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று (18) முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

சம்பிரதாயமாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதோடு, மரியாதை அணிவகுப்புகள், வாகன மற்றும் குதிரைப்படைத் தொடரணிகள் எவையும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வந்த ஜனாதிபதியை, நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜயமங்கல கீதம் இசைத்து வரவேற்றனர்.

தனது சிம்மாசன உரையை ஆற்றிய ஜனாதிபதி, “உலகப் பெருந்தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் கடினமான நேரத்தில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்துப் பணியாற்ற வேண்டிய தேசிய பொறுப்பு, அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளது. 05 வருடக் காலப்பகுதிக்குள் குறிப்பிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில், உலகளாவிய தொற்றுப் பரவல் காரணமாகப் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டது.

இருப்பினும், அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்ற மறக்கவில்லை” என்றார்.

எவ்வாறான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படினும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை முதன்மையாகக் கருதி, அதற்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் ஏற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்குள் பாரியளவில் வியாபித்திருந்த பாதாள உலகக் கோஷ்டிகளை ஒழிக்க, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை எப்போதும் சர்வதேசச் சட்டங்களையும் மரபுகளையும் மதிக்கும் நாடாகும். தன்னுடைய ஆட்சிக் காலத்தில், எவ்வகையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இனவாதத்தைத் தான் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளினதும் கௌரவம் மற்றும் உரிமைகளைச் சமமாகப் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் தேவையாக உள்ளதென்றும் கூறினார். எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைத்து மக்களுக்கும் வசதிகளை வழங்குவதே நல்லிணக்கம் மற்றும் அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகக் கருதப்படுகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்வேறு அரசியல் நோக்கங்களைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச முதலீடுகள் தொடர்பில் தவறான விளக்கங்களைக் கொடுத்து, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியல் உள்நோக்கத்துடன் யாராவது செயற்பட்டால், அது இந்நாட்டுக்குச் செய்யும் பாதகச் செயலாகும். நாட்டின் அபிவிருத்திக்கு, புதிய முதலீடுகளின் தேவை தற்போது அதிகமாகவே உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கான புதிய முதலீடுகளை ஈர்க்க, எதிர்காலத்தில் அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

அரச பல்கலைக்கழகங்களின் திறனை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாட்டில் உயர்தர அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கு இடமளிப்பது தொடர்பிலான விவாதத்துக்கு, இந்தப் பாராளுமன்றத்துக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நாடு, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வாழும் மக்களுக்கே சொந்தமானது. நாங்கள் இந் நாட்டின் தற்கால பாதுகாவலர்கள் மட்டுமே. இன்று நாம் எவ்வாறு செயற்படுகின்றோம் என்பதிலேயே இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, நாம் அனைவரும், எதிர்காலச் சந்ததியினருக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.