மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களைத் தெரிவிக்கும் வகையில், மஹா விஹாரவங்சிக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு, “ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்” கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவ நிர்வாகம், தாய் நாட்டின் மீதுள்ள பற்று மற்றும் அவரது கடந்தகாலம் முதல் தற்போது வரையான களங்கமற்ற இருப்பை அடையாளப்படுத்தும் வகையில், இன்று (02) பிற்பகல் கோட்டே ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வின் போதே, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையினால் இந்தக் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.
இதற்கான ஆவணப் பத்திரம் வாசிக்கப்பட்ட பின்னர், கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்க தேரர் கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தாபான தம்மாலங்கார தேரரினால், ஜனாதிபதி அவர்களுக்கு “ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்” கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்வின் வரவேற்புச் சொற்பொழிவை, அந்தச் சங்க சபையின் பிரதிப் பதிவாளரும் ஸ்ரீ லங்கா பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தருமான பேராசிரியர் வண. நெலுவே சுமனவங்ச தேரர் நிகழ்த்தினார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகச் செலவிடப்பட்ட காலத்தை விட அதிகளவான காலம் எஞ்சியுள்ளதால், எதிர்வரும் மூன்று வருடக் காலத்தைச் சிறப்பான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது என்று, இந்நிகழ்வின் பிரதான சொற்பொழிவை நிகழ்த்திய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் பிரதமப் பதிவாளரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் துறையின் தலைவருமான அக்கமஹா பண்டித பேராசிரியர் அதி வணக்கத்துக்குரிய கொடபிட்டியே ராஹுல அனுநாயக்க தேரர் தெரிவித்தார்.
வெற்றியைப் பகிர்ந்துகொள்ள பலர் இருப்பினும், முயற்சி அல்லது தவறுதலால் ஏற்படும் தோல்விக்கான பழி, எப்போதும் தலைவரிடத்திலேயே சுமத்தப்படும். இது சகஜமெனிலும், அரசியலில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்களுக்கு முகம் சுளிக்காமல், எதிர்காலத்தில் இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பலம் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதாக, அதி வணக்கத்துக்குரிய கொடபிட்டியே ராஹுல தேரர் குறிப்பிட்டார்.
ஆசீர்வதிக்கப்பட்ட இந்தக் கௌரவப் பட்டமானது, ஜனாதிபதி அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் பலமாகவும் சக்தியாகவும் இருக்குமென்று, நிகழ்வின் தலைமைத்துவச் சொற்பொழிவை நிகழ்த்திய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்க தேரர் கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தாபான தம்மாலங்கார தேரர் குறிப்பிட்டார்.
மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதம், பலம் மற்றும் தைரியம் போன்றவற்றை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்க எப்போதும் நடவடிக்கை எடுப்பதாகவும், தேரர் தெரிவித்தார்.
மஹா சங்கத்தினர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.