தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தாக்கியமை காரணமாகவே தாங்கள் வீட்டிலிருந்து வெளியேறியதாக, காணாமல்போயிருந்த நிலையில் மீரிகம பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொடதெனியா - வத்தேமுல்ல - பாதுராகொட பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறார்களும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
தமது இளைய சகோதரரை கவனித்துக்கொள்ளாமையினால் தாய் உள்ளிட்டவர்கள் தங்களைத் தாக்கியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொடதெனியா - வத்தேமுல்ல - பாதுராகொட பகுதியில் காணாமல்போயிருந்த இரண்டு சிறார்கள் 43 நாட்களின் பின்னர் மீரிகம நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இன்று கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த சிறார்கள் இருவரும் உணவு கோரி நேற்று அந்த வர்த்தக நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இதனையடுத்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான பெண் ஒருவர், அவர்களுக்கான உணவை வழங்கி, தங்குவதற்கும் அனுமதி வழங்கியிருந்தார்.
பின்னர் அவர், இன்று காவல்துறையினருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சிறார்களை மீரிகம காவல்துறையினர் பொறுப்பேற்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது வீட்டு உறுப்பினர்கள் தாக்கியதால் தாங்கள் மீண்டும் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என அவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், நேற்றைய தினம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடன் செல்வதற்கு விரும்புவதாகவும் குறித்த சிறார்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பல நாட்களாக நீர் கொழும்பில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் தங்கியிருந்ததாக குறித்த சிறார்கள் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில், அந்த இடத்தினை ஆராய்வதற்கு விசேட காவல்துறை குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.