தங்க இருப்புகளின் திரவத்தன்மையை மேம்படுத்துவதற்கான தேவைப்பாட்டின் அடிப்படையில், தமது தங்க இருப்புகளின் ஒரு பகுதியை விற்பனை செய்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் மத்திய வங்கியின் வசம், 382.2 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க இருப்பு இருந்த நிலையில், டிசம்பர் இறுதியில் அது 175.4 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, தங்க இருப்பு ஒரு மாதத்திற்குள், 54 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தப் பின்னணியில், கடந்த டிசம்பர் இறுதிக் காலப்பகுதியிலுள்ளவாறு, மத்திய வங்கியின் பன்னாட்டு ஒதுக்கு நிலைமையின் உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் தொடர்புடைய பல்வேறு தவறான வழிநடத்தல்கள் மற்றும் பிழையான விளக்கங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த அலுவல் சார் ஒதுக்குகளின் உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒதுக்கு முகாமைத்துவத் தேவைப்பாடுகளின் சகல அம்சங்களையும் கருத்திற்கொண்டு தற்போதைய ஒதுக்கு முகாமைத்துவத் தேவைப்பாடுகளுடனும் முன்னுரிமைகளுடனும் இசைத்துச் செல்லும் வகையிலேயே காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2008 இன் இறுதிப் பகுதியளவில் மத்திய வங்கியின் தங்க இருப்பானது, 92 மில்லியன் டொலர் என்ற 3.6 சதவீதம் பெறுமதியாகவே விளங்கியபோதும், 2014 அன்று இறுதியளவில் 893 மில்லியன் டொலருக்கு 10.9 சதவீதமாக அதிகரித்திருந்தது.
எனவே, நிலவுகின்ற ஒதுக்கு முகாமைத்துவ முன்னுரிமைகளுடன் இசைந்து செல்லக்கூடியவாறாக மத்திய வங்கியின் தங்க இருப்புக் கொள்வனவு, தக்கவைத்தல் அல்லது திரவப்படுத்தல் தேவைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒதுக்கில் உள்ள தங்க இருப்பின் பங்கு காலத்திற்குக் காலம் மாற்றமடையக் கூடியதென்பது தெளிவாகின்றது.
இந்தப் பின்னணியில், 2021 இறுதியளவில் மத்திய வங்கியின் தங்க இருப்புக்கள் திரவத்தன்மையினை மேம்படுத்துவதற்கான தேவைப்பாட்டின் அடிப்படையில், அதன் சொத்துப்பட்டியலில் 5.6 சதவீதம் குறைவடைந்துள்ளது.
எனினும், வெளிநாட்டு ஒதுக்கு மட்டங்கள் ஒதுக்கு சொத்துப்பட்டியலின் உள்ளடக்கத்தில் மாற்றமொன்றினை உத்தரவாதப்படுத்தும் பெறுமானங்களுக்கு வளர்ச்சியடையும்போது தங்க இருப்புகளை அதிகரிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் பரிசீலிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.