எனக்கெதிராக வாக்களித்த 52 இலட்சம் பேரின் வேலை விமர்சிப்பதுதான்; முதலில் நம்பிக்கை வையுங்கள்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனக்கெதிராக வாக்களித்த 52 இலட்சம் பேரின் வேலை விமர்சிப்பதுதான்; முதலில் நம்பிக்கை வையுங்கள்! -ஜனாதிபதி


மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.

"இன்று கடவத்தையிலிருந்து குருநாகல் வரையிலான அதிவேக நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியமானதொரு தருணமாகும். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்தப் பகுதியின் நிர்மாணப் பணிகளை  நிறைவு செய்தோம். நாடு மூடப்பட்ட ஒரு காலம் இருந்தது. கொவிட் தொற்றுப் பரவல் காரணமாகப் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தோம். இதற்குத் தேவையான பொருட்களைப் கொண்டுவர முடியவில்லை. இவ்வாறான இடையூறுகளுக்கு மத்தியில்தான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழிற்றறையினர் இணைந்து, இந்த வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தனர். நான் அமைச்சரிடம் எப்போதும் கேட்கும் ஒரு விடயம் தான், கொழும்புக்குச் செல்லக்கூடிய வகையில், மீரிகமவில் இருந்து கடவத்தை வரையிலான பகுதி எப்பொழுது நிறைவுபெறும் என்று? “ஜனாதிபதி அவர்களே! இதை நான் ஒன்றரை வருடத்தில் செய்து முடிப்பேன்” என்றார். அது நிறைவடைந்தால், குருநாகல் மக்கள் கட்டுநாயக்கவுக்கு மாத்திரமல்ல மத்தலவுக்கும் செல்ல முடியும். மேலும், நான் அவருக்குப் பல பொறுப்புகளை ஒப்படைத்துள்ளேன். ருவன்புர வீதியைப் பூர்த்தி செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அதேபோன்று, கலகெதரவுக்கான பாதையும் பூர்த்தி செய்யப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

'சுபீட்சத்தின் நோக்கு' அபிவிருத்தித் திட்டத்தை நாங்கள் உங்களுக்கு வழங்கினோம். அதனால்தான் அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் எனக்கு வாக்களித்தனர். அதேபோன்று, மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையிலான பாராளுமன்ற பலத்தை எமக்கு வழங்கினார்கள். இதுபோன்ற ஓர் உலகளாவிய தொற்றுப் பரவல் ஏற்பட்டு, நாட்டை மூடி, பல்வேறு தடைகளை ஏற்படுத்தி, முழு உலகுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படுத்தப்படும்  என்று நாங்கள் எப்போதும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தொற்று நோய்க்கு மருந்து இருக்கவும் இல்லை, தடுப்பூசி இருக்கவும் இல்லை. ஆனால், நாங்கள் முதல் நாளிலிருந்தே அதற்குத் தயாராக இருந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனால்தான் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது.

இன்று அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில், மில்லியன் கணக்கான மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். நாங்கள் ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கியுள்ளோம், மூன்றாவது தடுப்பூசியை வழங்கி வருகிறோம். பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இப்போது நாடு திறக்கப்பட்ட நிலையில், பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அன்று மூடப்பட்ட சுற்றுலா விடுதிகளை, இன்று திறக்கக்கூடியதாக உள்ளன.

எமது வணக்கத்துக்குரிய தேரர்களே, ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக நான் மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்துப் பணிகளையும் அடுத்த மூன்று வருடங்களில் செய்து முடிப்பேன் என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். எமது அமைச்சரவை, எம்முடன் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர், பொய்ப் பிரசாரங்களுக்கு மனந்தளராமல் இந்த மூன்று வருடங்களுக்குள் மக்களுக்கு வாக்குறுதியளித்த பணிகளைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று, அரச அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்காக உழைக்கவே நாம் வந்தோம். இந்த நாட்டில் இருந்த முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நாம் தயாராகும் போது, இன்று எம்மீது வரும் அதே குற்றச்சாட்டுகள் அன்றும் வந்ததை நாம் அறிவோம். கடைசி நாள் வரை எமக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் முப்பது வருட யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தோம். அப்படியானால், எஞ்சிய மூன்று வருடங்களில் நாங்கள் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். என் மீது நம்பிக்கை வையுங்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது நீங்கள் அன்று வைத்திருந்த நம்பிக்கையை இன்றும் வைத்திருங்கள். எம்மால் இதனைச் செய்ய முடியும்.

நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் வந்துள்ளோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அப்படியானால், இந்த அபிவிருத்தியின் பங்காளிகளாக இருக்குமாறு ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதுதான் அவசியமானது. விமர்சித்து மக்களை மனம் தளரச்செய்ய வேண்டாம். அன்று முடியாது என்று கூறப்பட்ட யுத்தத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வந்தோமோ, அதேபோன்று இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க முடியும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த மூன்று வருடங்களின் கடைசித் தருணத்திலும் அநுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கினார்கள். அதேபோன்ற பிரச்சினைகளுடன் தான் நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். உலகம் முழுவதும் இதுபோன்ற ஒரு தொற்றுநோய் ஏற்படும் என்று உலகில் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

இன்று எழுந்துள்ள சில பிரச்சினைகள், இக்காலத்தில் தோன்றியவை அல்ல. பல ஆண்டுகளாக உள்ளன. பல அரசாங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளன. அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கவும் துறைமுகங்கள் அமைக்கவும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் கடன் வாங்கப்பட்டது. நாம் அந்தக் கடன்களை அடைக்க வேண்டியிருந்தது. அந்தக் கடனை நாம் செலுத்த வேண்டும். எனது இரண்டு வருட காலங்களில், நான் எந்தக் கடனும் வாங்கவில்லை. இதைத் தெரிந்துகொண்டு நாம் ஒரு சில தடைகளை ஏற்படுத்தினோம். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வாகனங்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது. இது, மக்களுக்கு சாதகமான விடயம் அல்ல. ஆனால், இந்த நிலையை அறிந்தே அந்த நடவடிக்கைகளை எடுத்தோம். இன்னும் பல ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தினோம். இவை நமது அன்னியச் செலாவணியை மட்டுப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டன.

நாங்கள் பெற்றுவந்த வருமானங்களை, கொவிட் காரணமாக பெருமளவில் இழந்தோம். சுற்றுலாத்துறை மூலம் கிடைத்துவந்த 05 பில்லியன் டொலர்களை நாம் இழந்தோம். நாங்கள் எங்கள் தொழிலாளர்களிடமிருந்து பெற்று வந்த பணத்தையும் இழந்தோம். தற்போது சுற்றுலாப் பயணிகள் படிப்படியாக வருகை தருகின்றனர். கடந்த டிசெம்பர் மாதத்தில் 85,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 10 பில்லியன் டொலர் வரை செல்வதே எங்களின் இலக்காக இருந்தது. 05 பில்லியன் டொலர்களாக இருந்த சுற்றுலாத்துறையின் வருமானம் கொவிட் காரணமாக பூச்சிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தற்போது சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சியடைந்து வருகின்றது. தொழிலாளர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். தடுப்பூசிகளை வழங்கி, கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தி, நாட்டை மீண்டும் திறந்ததன் காரணமாகத்தான் பொருளாதாரத்தை மீண்டும் முன்னோக்கி நகர்த்த முடிந்துள்ளது. இந்த நிலைமையை இழக்காதீர்கள். எனவே, அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் நம் நாடு விரும்பிய பாதையில் செல்ல முடியும்.

எதிர்க்கட்சிகளின் செயற்பாடு விமர்சிப்பதுதான். அறுபத்தொன்பது இலட்சம் பேர் எனக்கு வாக்களிக்கும் போது, ஐம்பத்திரண்டு இலட்சம் பேர் எதிராகவும் வாக்களித்தனர். அதையும் மறந்துவிடாதீர்கள். அந்த ஐம்பத்திரண்டு இலட்சம் பேரின் வேலை விமர்சிப்பதுதான். பொய்ப் பிரசாரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். மனம் தளராதீர்கள்.

இன்று காலை நான் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் அவர்களிடம் “இப்போது நீங்கள் நெல் கொள்வனவு செய்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “வவுனியா பிரதேசத்தில் தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது” என்றார். “எத்தனை ரூபாய்க்கு வாங்குகிறீர்கள்”? என்று கேட்டேன். ஈர நெல்லை 80 ரூபாய்க்கும் உலர் நெல்லை 90 ரூபாய்க்கும் வாங்குவதாகக் கூறினார்.

அன்று விவசாயிகளால் 25 ரூபாய்க்குகூட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் இன்று, 90 ரூபாய்க்கு நெல் விற்கப்படுகிறது. மற்றவர்கள் 90 ரூபாa்க்கு நெல்லை வாங்கினால் அரசாங்கம் 95 ரூபாய்க்கு நெல்லை வாங்க வேண்டும் என்று விவசாய அமைச்சரிடம் நான் கூறினேன். அந்தப பணம் விவசாயிகளுக்குச் செல்கிறது. அது பரவாயில்லை.

துரதிஷ்டவசமாக, எதிர்க்கட்சியினர் பல்வேறு விவசாயிகளைத் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களைச் செய்வித்தனர். ஆனால், உரத்தை இலவசமாகக் கொடுத்தது யார், ஐம்பது ரூபாய் வரை உத்தரவாத விலையைக் கொண்டு வந்தது யார்? அவற்றை இந்த அரசாங்கமே செய்தது. நாம் நெல்லின் விலையை ஐம்பது ரூபாய்க்கு உயர்த்திய போது, தனியார்த் துறையினர் அதை ஐம்பத்தைந்து, அறுபது மற்றும் எழுபது ரூபாய்க்கு வாங்கினர். இந்தப் பணம் விவசாயிகளுக்கே செல்கிறது. அன்று நான் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லும் போது, அப்பகுதிகளில் உள்ள மக்கள், நீங்கள் ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்தால் எமது மிளகுக்கு நானூறு ரூபாய் தரவேண்டும் என்றார்கள். இன்று மிளகின் விலை ஆயிரத்து இருநூறு ரூபாய். கறுவாவுக்கு அன்றிருந்த விலையை விடவும் இன்று மூன்று மடங்குக்கும் அதிகமான விலை கிடைக்கின்றது. தேயிலை, தேங்காய், இறப்பர் அனைத்துக்கும் இன்று நல்ல விலை கிடைக்கிறது. வெற்றிலை, பாக்கு, பால் இவை அனைத்திலிருந்தும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது. நாங்கள் நம் நாட்டில் விளைவிக்கக் கூடியவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.

ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில், பச்சைப்பயறு அதிகளவு அறுவடையைப் பெற்றுள்ளது. அன்று பச்சைப் பயிறை விற்க முடியவில்லை என்று விவசாயிகள் கூறியபோது, எமது அரசாங்கம் 01 கிலோகிராம் பச்சைப் பயறை 450 ரூபாய்க்கு வாங்கினோம். நாம் அதனை சதொசவில் இருநூற்று இருபத்தைந்து ரூபாய்க்கே விற்றோம். அந்த நட்டத்தை மக்களுக்காகவே அரசாங்கம் ஏற்றது. எத்தனையோ தடைகள் இருந்த போதும், மக்களுக்கு எவ்வளவு நிவாரணங்களை வழங்கினோம். அதேபோன்று நாம் எப்போதும் அரச ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தவில்லை. தனியார்த் துறையினரும் சம்பளம்  வழங்கியது எனக்கு தெரியும். இந்நாட்டில் உள்ள பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை நான் இன்று சந்தித்தேன். இவர்கள் அனைவரும் கடந்த வருடம், வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக இலாபம் ஈட்டியுள்ளனர். அவை உள்நாட்டு நிறுவனங்கள் ஆகும். “மாகா” நிறுவனத்தின் பொறியலாளர் கூறியது போல், நாங்கள் உள்நாட்டுj் தொழில் முயற்சியாளர்களை முன்னேற்றுவோம். நாங்கள் அதனை உறுதியளித்துள்ளோம்.

நாங்கள் இறக்குமதி செய்துகொண்டிருந்த சில பொருட்களை நிறுத்திவிட்டோம். அதனால், அந்தப் பொருட்களின் பற்றாக்குறை சிறிது காலத்துக்கு இருக்கும். இப்போது இந்த நாட்டின் டைல்ஸ் சிறந்த தரத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நான் அந்தத் தொழிலதிபர்களிடம் கூறினேன், உங்கள் உற்பத்தியை அதிகப்படுத்துங்கள். தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க வேண்டாம்.  நியாயமான விலையைப் பெற்றுக்கொடுங்கள் என்று.

உள்நாட்டு விவசாயி, உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்களை முன்னேற்றுவதே எங்கள் கொள்கையாகும். அதனை நாம் தொடர்வோம்.

இரசாயன உரப் பயன்பாட்டை நிறுத்தச் சொன்னேன். அது கடினமான விடயம். ஆனால், அது மக்களுக்காகவே செய்யப்பட்டது. அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற பிரதேசங்களில், எத்தனை பேருக்கு சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் நோய் உள்ளது? அடுத்தத் தலைமுறைக்காக எடுக்கப்பட்ட முடிவுகளே இவை. இது கடினமானது தான். எங்களை நம்பும்படி விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆரம்பத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்காலத்தில் சரிசெய்து முன்னெடுப்போம். விவசாயிகளிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நான் உங்களுக்காக முன்நின்ற ஒரு ஜனாதிபதி. இன்று கூச்சல் போடும் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், பலவற்றை மறந்துவிட்டார்கள். அன்று விவசாயிகளின் நெல் அறுவடையை 25 ரூபாய்க்கு விற்க முடியவில்லை. விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுத்தது நமது அரசாங்கம்தான். விவசாயிகளைப் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் விவசாயத்தின் அடிப்படையில் உருவாகியவர்கள். நமது பெற்றோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்கள். எனது தந்தை பாராளுமன்றம் வந்தது வயலில் இருந்து சேற்றைக் கழுவிக்கொண்டே என்பது அன்றிலிருந்து மக்களிடம் பிரபலமாகியுள்ளது. நாம் விவசாயியை எப்போதும் மறக்க மாட்டோம். நாங்கள் உறுதியளித்த பயிர்ச்செய்கைப் புரட்சியை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சரிடமும் காணி அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்தேன். பயிரிடப்படாத நிலங்கள் அனைத்தையும் இளைஞர்களுக்கு வழங்கி, நாம் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோம். நான் ஆட்சிக்கு வந்ததும், தரிசு நிலமாக இருந்த நெல் வயல்களில் இளைஞர்கள்  விவசாயம் செய்ய ஆரம்பித்தமை எனக்கு நினைவிருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்ததை அடைந்துகொள்வதற்கு தரிசு நிலமாக உள்ள வயல்களில் மீண்டும் பயிரிட வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டுமொருமுறை என் மீதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீதும் நம்பிக்கை வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அன்று எந்த நம்பிக்கையுடன் நீங்கள் எனக்கு வாக்களித்தீர்களோ, அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியில் எனக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.