VIDEO: “கைதிகளும் மனிதர்களே” - ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: “கைதிகளும் மனிதர்களே” - ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக சிறைகளில் வாடுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களில், சுமார் 12,000 பேர் யுத்த முடிவின் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடத்தினை தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யுங்கள்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பாராளுமன்றில் கோரிக்கை!

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். 

இன்று (09) நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,  
 
“இன்றைய தினம் விளையாட்டுத்துறை, தொழில்நுட்பம், சிறைச்சாலை, நீதி உட்பட பல அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தில் பேசக்கிடைத்தமைக்கு நன்றி கூறுகிறேன். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அந்தத் துறையின் முன்னேற்றத்துக்கு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்தவகையில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த காலங்களில், மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு என இடப்பட்ட அடித்தளங்களில் வவுனியாவில் மாத்திரமே, தற்போது பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. மன்னாரில் தடைப்பட்டிருந்த வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டதாகவும், முல்லைத்தீவில் இடம் சம்பந்தமான பிரச்சினையால் அதனை முன்னெடுக்க முடியாதுள்ளது எனவும் அறிகின்றோம். எனவே, இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றேன்.

அதுமாத்திரமின்றி, நீங்கள் பல அமைச்சுக்களுக்கு பொறுப்பாக இருக்கின்றீர்கள். எதிர்கால இளைஞர் சமூகத்தை நல்ல சிந்தனை உள்ளவர்களாக, நாட்டின் ஒற்றுமையை கட்டியெழுப்பக்கூடியவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கின்றது. அத்துடன், நாம் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை முறியடிப்பதற்கு, இன சௌஜன்யம் ஏற்படும் வகையில் இளைஞர்களையும் தயார்படுத்த வேண்டியிருக்கின்றது. அதன்மூலமே நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்க முடியும். இதனாலேயே எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ முடியும் என்பதில் நீங்கள் உடன்படுவீர்கள் என நான் நம்புகின்றேன். இளைஞர் விவகார அமைச்சை அதற்க்கு அடித்தளமாகப் பயன்படுத்துங்கள்.

இன்றைய விவாதத்தில் சிறைச்சாலை தொடர்பான விடயதானமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. சிறைச்சாலையில் சில மாதங்கள் இருந்தவன் என்ற வகையில், சில விடயங்களை சிறைச்சாலைக்கு பொறுப்பான அமைச்சரிடம் சுட்டிக்காட்ட விளைகிறேன். அங்கு பணிபுரியும் சிறைக்காவலர்கள், ஊழியர்களின் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதை அறிந்துகொண்டேன். “எம்மைப்பற்றி எவருமே அக்கறைகொள்வதாக தெரியவில்லை” என்ற வேதனையுடனேயே அவர்கள் வாழ்கின்றனர். சுமார் 5000 பேர் ஊழியம் செய்யும், சிறைச்சாலை ஊழியர்களின் நலனில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதுமாத்திரமின்றி, சிறைச்சாலையில் வசதிகளும் மிகவும் மோசமாக இருக்கின்றது. அவர்களின் விடயத்திலும் “கைதிகளும் மனிதர்களே” என்ற எண்ணத்துடன் கரிசனை செலுத்துங்கள்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக சிறைகளில் வாடுகின்றனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களில், சுமார் 12,000 பேர் யுத்த முடிவின் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதைவிட சிற்சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள், இன்னும் குற்றப்பத்திரிகைகள் கூட தாக்கல் செய்யப்படாமல் தசாப்தகாலமாக சிறையில் வாடுகின்றனர். அவர்களின் விடுதலையிலும் கவனம் எடுக்குமாறு நீதி அமைச்சரிடம் வேண்டுகின்றேன்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூட அண்மையில் பேசும்போது, “இந்த விடயத்தை கட்டம்கட்டமாக முன்னெடுப்போம்” என உறுதியளித்தார். நான் சிறையில் இருக்கும் போது என்னிடம் வந்து அவர்கள் வேதனைப்பட்டனர். அவர்களின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும் அல்லது விசாரணையின்றியும் இருக்கின்றது. சிங்கள இளைஞர்கள் கூட இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் காலத்தைக் கடத்துகின்றனர். தமிழ் இளைஞர்கள் பலரின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. கடந்த இரண்டு வருட காலத்துக்குள் சுமார் 40 அல்லது 50 இளைஞர்கள், ‘புலிகளின் மீளெழுச்சியில் தொடர்புபட்டார்கள்’ என கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 20, 22 வயது நிரம்பிய இந்த இளைஞர்களுக்கு புலிகள் தொடர்பில் பெரிதாக தெரிந்திருப்பது நியாமில்லை. ஏனெனில், 2009 இல் யுத்தம் முடிந்தபோது, அவர்கள் சுமார் 10 வயது நிரம்பியோர்களாகவே இருந்திருப்பர். வட்ஸ்அப்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற செய்திகளை பரிமாறியதற்காகவே அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த இவர்களுக்கு வழக்காடுவதற்குக் கூட வழி இல்லை. எனவே, அவர்களின் விடுதலையிலும் சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பலர் கைது செய்யப்பட்டனர். அதில், சுமார் 40 அல்லது 45 பேருக்கு மாத்திரமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 250 பேர் அளவில், இன்னும் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் சிறையிலே வாடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், ஒருநாள் வகுப்பு அல்லது செயலமர்வு ஆகியவற்றுக்கு, எதுவுமே அறியாது சென்றதனாலும், சிறிய காரணங்களுக்காகவுமே, பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்குவது பற்றி நீங்கள் சிந்திக்க முடியும். அவர்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்குகள் நிறைவடைய நீண்டகாலம் எடுக்கலாம். ஏற்கனவே, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு 23,000 குற்றச்சாட்டுக்கள் வரை இருப்பதாக நாம் அறிகிறோம். எனவே, இவற்றை விசாரிக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியாது. ஆகையால், இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு வேண்டுவதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கின்றோம். 

ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, எந்தவொரு நீதிமன்றத்திலும் விடுதலை செய்யப்பட முடியாமல் தவித்துக்கொண்டிருப்போரின் விடயத்தில் கவனம் செலுத்துங்கள். அவர்களின் பெற்றோர்கள் எம்மிடம் வந்து அடிக்கடி முன்வைக்கும் இந்த விடயத்தை, நீதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம். 

அதேபோன்று, “ஒரே நாடு, ஒரே சட்டம்” செயலணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் தொடர்பில், பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. நாங்கள் இதைப்பற்றி பேசினால் எம்மை பிழையான கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள். இவ்வாறான ஒருவரின் மூலம் நாட்டில் நிலையான சமாதானத்துக்கான திட்டத்தை கொண்டுவர முடியாது. இந்தச் செயலணியில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும், அங்கீகாரம் இல்லாத அவர்களை நியமித்து, சமூகம் சார்பாக நியமிக்கப்பட்டதாக கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. எனவே, இந்த விடயம், எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் வேதனையையே தந்திருக்கிறது. ஆகையால், இந்த விடயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். 

அதேபோன்று, ‘ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்’ என்ற கருப்பொருள் தொடர்பில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றேன். மேற்கத்திய நாடுகளில் இவ்வாறன வேலைத்திதடங்களுக்கு நிறைய ஒதுக்கீடுகள் செய்கின்றார்கள். எனவே, அந்த விடயத்திலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். உங்களின் அமைச்சின் கீழ் இந்த நிறுவனம் வருவதினால், எதிர்காலத்தில் வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடி, நாட்டின் தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாட்டுக்கு வழி செய்ய முடியும் என நம்புகிறேன். இதற்கென முதலீடு செய்பவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் கோருகிறேன்” என்றார். 

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யுங்கள்” நாடாளுமன்ற உரை | 2021.12.09

Posted by Rishad Bathiudeen on Thursday, 9 December 2021

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.