பல வருடங்களாக முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்த போதிலும், இதை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை உரிய தரப்பினர் கவனத்தில் கொள்ளாமையினால் ஏற்பட்ட விளைவே இன்றைய கவலையான நிலைக்கு காரணமாகும்.
இதற்காக குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், உரிய தரப்புக்கள் இதன் பின் விளைவுகளையும், சந்தர்ப்பவாதிகள் மூக்கு நுழைப்பதையும் தடுக்கக்கூடிய வகையில் அவ்வப்போது கூடிய சீக்கிரத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நீயா நானா என வரட்டு கெளரவங்களையும், அதிகாரங்களையும் பேசிப் பேசி குழுக்களாகப் பிரிந்து, பாரம்பரியங்கள் போன்றவற்றை கையிலெடுத்து, ஆண்டாண்டு காலமாக விவாதித்தமையே இன்று முஸ்லிம் சமூகம் தனியார் சட்ட உரிமையை இழப்பதற்கு முக்கிய காரணமாகும்.
இவற்றை ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு குழுவினரை சுட்டிக் காட்டி குற்றம் கூறினாலும், இதன் உண்மை நிலை என்ன என்பதை முன்னை நாள் அமைச்சர் அவர்கள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் உண்மையை வெளிப்படுத்தினார் முன்னை நாள் அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்கள். சமூகத்தின் பொறுப்புக் கூற வேண்டிய தலைமைகள் விட்ட பிழையினால் வருங்காலத்தில் துன்பங்களை அனுபவிக்கப்போவது, இதனால் பாதிப்படையப் போவது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமுமேயாகும்.
எனவே முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் கண் கெட்ட பின்னே சூரியனைக் காண தலைப்பட்ட முஸ்லிம் சமூகம் இது போன்ற ஏனைய விடயங்களிலாவது பாடம் படிக்குமா?
-பேருவளை ஹில்மி