அடுத்த பிறவியில் நான் சிங்களவராக பிறக்க வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த பிறவியில் நான் சிங்களவராக பிறக்க வேண்டும்!


இந்த பிறந்த நாளில், இதற்கு முன் நான் கடந்து வந்த பிறந்த நாட்களில் தோன்றாத ஒரு விருப்பம் எனக்குள் தோன்றுகிறது. அடுத்த பிறவியில் நான் இலங்கையிலே  ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும். தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள குக்கிராமத்து குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கான காரணங்களை நான் பகிரங்கமாக கூற விருபவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

ஆனால், இதன் அர்த்தம் எனக்கு தமிழ் மீது வெறுப்பு என்பதல்ல. என் தாய் தமிழ் மீது எனக்கு தீராத பற்று இருக்கிறது. நான், மாணவ பருவத்தில் இருந்து தமிழ் மொழியில் கையெழுத்திடும் தமிழன். தமிழ் திமிர் கொண்ட எனக்கு ஒரு போதும் உடல் களைப்பு ஏற்படுவதில்லை. ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் எனக்கு வயது குறைவதாகவே, எனக்குள் இளமை ஊஞ்சலாடுவதாகவே உணர்கிறேன்.

ஆனால், சமீப காலமாக, என் மனதில் ஒருவிதமான சலிப்பு ஏற்படுகிறது. வடக்கிலும், கிழக்கிலும், மலைநாட்டிலும் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளை இட்டு, தமிழ் அரசியல் பரப்பை இட்டு, எனக்கு சலிப்பு ஏற்படுகிறது. நீண்ட நாள் இந்த பரப்பில் இருக்க என் மனம் விரும்ப மறுக்கிறது. 

கட்சியின் பொதுசெயலாளர் குருசாமி தலைமையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று கொழும்பு பிரைடன் விடுதியில் நடத்திய கட்சி ஒன்றுகூடலில் கலந்துக்கொண்டு இவ்வாறு கூறிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,      

இன்று என் பிறந்த நாள். என் தாய் டயனா தவமணி கணேசனும்,  தந்தை வைத்தியலிங்கம் பழனிசாமி கணேசனும் உயிரோடு இருந்திருந்தால், நான் இன்று செய்யும் காரியங்களை கண்டு மகிழ்வார்கள். என் நண்பன் நடராஜா ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தாலும், இன்றைய எம் நகர்வுகளில் பங்காளியாக இருந்தே இருப்பான்.  ஆனால், இவர்கள் இல்லையே. 

என்றாலும் இவர்களை ஈடு செய்ய எனது உடன்பிறவா நண்பர்கள், இரத்தத்தின் இரத்தங்கள், நீங்கள் நேற்றிலிருந்து, நாடு முழுக்க, உலகம் முழுக்க இருந்து வாழ்த்து கூறுகிறீர்கள். நேரில் வந்து சந்திக்கிறீர்கள். உங்கள்  அன்பால் பூரித்து போய் விட்டேன். அனைவருக்கும் நன்றி.

யார் என்ன சொன்னாலும், தமிழ் அரசியல் பரப்பில், இன்றைய பிரதான பேசுபொருள், தமிழ்-முஸ்லிம் கட்சி தலைவர்களது கூட்டு செயற்பாடுதான். 

நண்பர்கள் செல்வம், சித்தார்தன் ஆகியோரது கூட்டு முன்முயற்சியால் ஆரம்பமாகி இருக்கும் தமிழ்-முஸ்லிம் கட்சி தலைவர்களின் கலந்துரையாடல் பற்றி இன்று  தமிழ் பேசும்  ஊரெங்கும் பேச்சு.

சிலர் திட்டி தீர்த்து தம் மன விகாரங்களை காட்டுகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பெரும் பதில்களை கூறி, அவர்களை "காதலிக்க எனக்கு நேரமில்லை". மிகப்பலர், இது நல்ல "காலோசித காரியம்" என பாராட்டுகிறார்கள். 

அவர்களுக்கு நன்றி. பல கட்சிகள் தங்களையும், இதில்  இணைத்துக் கொள்ள சொல்கிறார்கள். எமது அடிப்படைகளை ஏற்பவர்கள் அனைவரும்  படிப்படியாக உள்வாங்கப்படுவார்கள் என நம்புகிறேன். 

சமகாலத்தில் இத்தனை எண்ணிக்கையில் தமிழ் கட்சிகள் கூடி பேசுவது இதுவே முதல் தடவை. இதை நான் நீண்ட காலமாக சொலி வந்தேன். யாரும் கேட்கவில்லை. இப்போது நண்பர்கள் செல்வமும், சித்தார்தனும் கேட்டு வந்தார்கள். நானும் இணைந்துக்கொண்டேன்.  

இன்னொரு விசேடம், இதில் ஈழத்தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் என தமிழ் பேசும் மூன்று தரப்பு கட்சி தலைவர்களும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இதை கவனிக்க தவற வேண்டாம்.  

பாருங்கள், சிங்கள கட்சிகள் மத்தியில் எவ்வளவோ குடுமி பிடி சண்டைகள். ஆனால், தமிழரை, அதாவது ஈழத்தமிழரை, மலையக தமிழரை, தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களை ஒடுக்குவது என்றால், எல்லோரும் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தாவது நாம் பாடம் படிக்க கூடாதா?       

"மனோ அண்ணையும், இந்த 13க்குள் தமிழரை இறுக்கும், சதியில்  சிக்கி விட்டார்" என்று தான் வேதனைப்படுவதாக தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  நாகரீகமாக கூறி இருக்கும் ஒரு காணொளியை நான் கண்டேன்.  அதேபோல், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெருந்தொகை எம்பீக்களை பாராளுமன்றத்தில் கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்களை, "அந்த கட்சி, இந்த கட்சி, வந்த கட்சி, தலைவர்கள்" என தம்பி எம். ஏ. சுமந்திரன், எடுத்தெறிந்து பேசிய காணொளியையும் கண்டு  வேதனையடைந்தேன்.

இவர்களுக்கு "அண்ணன்" என்ற முறையில் நான் காரசாரமாக பதில் கூற போவதில்லை. எவருக்கும் கடன் கொடுக்கும் அளவுக்கே இன்று, எனக்கு நிதானமும், முதிர்ச்சியும் நிறைய இருக்கிறது. அவர்களது பேச்சுரிமையை  நான் மதிக்கிறேன்.  

ஒன்றை மட்டும் கூற விளைகிறேன். இந்த  கட்சி  தலைவர் ஒன்றுகூடலின் அடிப்படை "தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச கோரிக்கை யோசனைகள்" என்பதாகும். இந்த "குறைந்தபட்சம்" என்பதன் அர்த்தம் 13 என்பது இறுதி தீர்வு அல்ல, என்பதாகும்.  13க்கு அப்பால் தீர்வுகள் வர 13 தாண்ட வேண்டும். இந்த ஜனாதிபதி, பிரதமர் சட்டத்தரணி தம்பிகள், இதை  புரிந்துக்கொண்டு  தமது கட்சி மட்டங்களில் இருந்தபடி எம்முடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன். 

 13 ப்ளஸ் என்பது மஹிந்தவின் உலக மகா பொய். இறுதி யுத்தத்துக்கு முழு உலகின் ஆதரவை பெற அவர் சொன்ன அண்டப்பொய் அதுவாகும். அவர் ஒரு பொய்யர். இன்று மஹிந்த ராஜபக்ஷ எமக்கு  13க்கு அப்பால் தீர்வு தர தயாராக இருப்பதாகவும், அதை எமது தமிழ்-முஸ்லிம் கட்சி தலைவர்களது கூட்டு செயற்பாடு தடுப்பதாகவும் கூறுவது, அபத்தம்.

உண்மையில்  மஹிந்தவின் ஜனாதிபதி சகோதரர், புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்க இரகசியமாக திட்டமிடுகிறார். அதில் 13ஐ முழுக்க அகற்ற பார்க்கிறார்கள். ஆகவே  மஹிந்த ராஜபக்ஷ தர விரும்புவது  13 ப்ளஸ் அல்ல. அது 13 மைனஸ்.

உண்மையில், 13ம் திருத்தம், மாகாணசபைகள் சட்டம், இவை எல்லாம், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தைகள். இதில் தமிழ் தரப்பு கையெழுத்திடவில்லை. இந்தியாவுக்கு அன்று முதல் இந்த நோய் இருக்கிறது. 1964ம் ஆண்டு இந்திய அரசு, இலங்கை  அரசுடன் கையெழுத்திட்ட, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்திலும் மலையக தமிழர் பிரதிநிதிகள்  தொடர்பு படவில்லை. எம்மை கலந்து ஆலோசிக்காமலேயே எமது தலைவிதியை இவர்கள் தீர்மானித்தார்கள்.

சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் இந்நாட்டில் மலையக தமிழரை அரசியல்ரீதியாக பலவீனமடைய செய்துள்ளது. அந்த பலவந்த நாடு கடத்தல், நடக்காமல் இருந்திருந்தால், இன்று தென்னிலங்கையில் மாத்திரம்  30 தமிழ் எம்பீக்கள் இருந்திருப்போம். அதில் பெரும் தொகை தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிக்களாக நான் மாற்றி இருப்பேன்.

அதேபோல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது, புலிகளை தவிர்த்து, இதே ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈபிடீபி ஆகிய போராளிகள் இந்திய, இலங்கை அரசுகளை நம்பி ஆயுதங்களை கையளித்து,  தேர்தல் அரசியலுக்குள்ளே வந்தார்கள்.

அதேபோல், இறுதி யுத்தத்தின் போது,  முழு உலகமே இலங்கை அரசுக்கு துணை வந்தார்கள். இதன்மூலம் உலகம் எமக்கு தந்த செய்தி என்ன?  யுத்தத்தின் பின்னர் தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்பதாகும். ஆனால், இன்று யுத்தம் முடிந்து  12 ஆண்டுகள் ஆகியும் ஒரு அங்குலம்கூட  முன்நோக்கிய நகர்வில்லை.

அதேபோல், 1964ம் ஆண்டின் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் அர்த்தம், இலங்கை குடியுரிமை பெறும் மலையக தமிழருக்கு, ஏனைய இலங்கை பிரஜைகளுக்கு இருக்கும் அதே உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதுவே அந்த ஒப்பந்தத்தின் உள்ளார்த்தம் ஆகும். 

ஆனால், 57 ஆண்டுகள் ஆகியும் மலையக தமிழருக்கு, இந்நாட்டில் முழுமையான காணி உரிமை, கல்வி உரிமை, அரசியல் உரிமை, வீட்டுரிமை ஆகியவை சமமாக கிடைப்பது இல்லை.

ஆகவே, தமிழ்-முஸ்லிம் கட்சி தலைவர்களது கூட்டு செயற்பாடு என்பது, இலங்கை, இந்திய, உலக அரசுகளுக்கு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான  சட்டபூர்வமான கடப்பாடுகளை ஞாபகப்படுத்துவதுதான். 

இனியும் தாமதம் வேண்டாம்.  இனியும் எம்மால் பொறுக்க முடியாது. எங்கள் வாழ்வுடன் இனியும் விளையாடாதீர்கள் என உரக்க கூறுகிறோம்.  வாருங்கள், எல்லோரும் ஒரே குரலில் கூறுவோம்.

இல்லாவிட்டால் எனக்கு விடை கொடுங்கள். நான் மறைந்து, மீண்டும் பிறந்து வருவேன். தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள  குக்கிராமத்து குடும்பத்தில் பிறந்து வருவேன் என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.