லண்டனில் இருந்து வந்த பெண்ணை கொன்று முதலைகளுக்கு இரையாக்க கால்வாயில் வீசிய நபர் கைது!

லண்டனில் இருந்து வந்த பெண்ணை கொன்று முதலைகளுக்கு இரையாக்க கால்வாயில் வீசிய நபர் கைது!


கிளிநொச்சி, உதயநகர், அம்பாள்குளம் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தாயொருவரை கொலை செய்து முதலைகள் நடமாடும் கால்வாயில் சடலத்தை வீசிய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர்.


உயிரிழந்த தாய் இங்கிலாந்தின் லண்டனில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


அம்பாள்குளத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான இராசேந்திரம் இராஜலக்ஷ்மி உதயநகர் அம்பலக்குள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு முதல் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.


பின்னர் அவர் தங்கியிருந்த வீட்டின் தரையில் இரத்தக் கறைகளைக் கண்டறிந்த பொலிஸார், குடியிருப்பாளர்கள் வழங்கிய மேலதிக தகவலின் அடிப்படையில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.


சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், பெண்ணைக் கொன்று மோட்டார் சைக்கிளில் சடலத்தை எடுத்துச் சென்று, வீட்டில் இருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் முதலைகள் அதிகம் உள்ள கந்தபுரம் எனும் பகுதியில் உள்ள கால்வாயில் வீசியமை தெரியவந்துள்ளது.


பின்னர் குறித்த கால்வாய்க்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், குறித்த பெண்ணின் சடலம் உரப்பையில் மிதப்பதை கண்டுள்ளதுடன், சடலத்தை கால்வாயில் வீசுவதற்கு வேறு நபர் உதவி செய்தாரா என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.