'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பில் தகவல் சேகரிக்க என்னுடன் பெருந்தொகையானோர் இணைந்துள்ளனர்! -ஞானசார தேரர்

'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பில் தகவல் சேகரிக்க என்னுடன் பெருந்தொகையானோர் இணைந்துள்ளனர்! -ஞானசார தேரர்


இலங்கையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு கருத்துக்களைச் சேர்ப்பதற்காகப் பெருந்தொகையான சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொண்டுள்ளதாக அதன் தலைவர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


பொது மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்ட உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு வந்து கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு, டிசெம்பர் 20 ஆம் திகதி முதல் 23ஆ ம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.


இந்நாட்களில், மதத் தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முஸ்லிம் மற்றும் பௌத்த மத அமைப்புகள் மற்றும் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர், உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு வருகை தந்தனரென்று, தேரர் தெரிவித்தார்.


புதிய அலுவலகத்திற்கு வரும் மக்கள், இனம், மதம் அல்லது மாகாணம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், குறிப்பாக ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற புதிய கருத்தாக்கத்தில் ஆர்வமாக இருந்தனர்.


வடக்கு, கிழக்கு உட்பட பெரும்பாலான மக்கள், இந்தக் கருத்து யதார்த்தமாக மாறுவதைக் காண மிகவும் ஆவலுடன் இருப்பது, நாட்டின் அபிவிருத்திக்கு ஒரு சக்திவாய்ந்த தூண்டுகோலாகும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


தனிப்பட்ட முறையில் மற்றும் நிறுவன ரீதியாக தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவிக்க விரும்பும் அனைவருக்கும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அந்த யோசனைகள் அனைத்தையும் தானும் தனது குழுவினரும் எந்த நேரத்திலும் சேகரிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


ஒரே நாடு, ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆய்வை நடத்தி, புதிய சட்டமூலத்தை உருவாக்கும் பணியைத் தனக்கும் தனது குழுவுக்கும் அளித்துள்ளதாகக் கூறிய அவர், உரிய காலத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.


ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற தலைப்பிலான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக்க மற்றும் செயலணி உறுப்பினர்களும், இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.