திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சக உத்தியோகத்தர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மரணத்திற்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே டிசம்பர் 24 முதல் அமலுக்கு வரும் வகையில் இப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒரு சார்ஜன்ட், இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோர் அடுத்த பதவிகளுக்கு தரம் உயர்வு பெற்றுள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.
இதனால் சம்பவ இடத்திலேயே மூன்று பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்தார்.
சந்தேகநபர் பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதுடன், இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்களுடன் அவரது சொந்த ஊரான எத்திமலை பொலிஸாரிடம் சரணடைந்தார்.
இந் நிலையில் அவர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.